வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: வெள்ளி, 6 செப்டம்பர் 2019 (21:24 IST)

சந்திரயான் 2: நிலவில் தரையிரங்கும் வரலாற்றுத் தருணத்தை நோக்கி

இஸ்ரோ தலைவர் சிவன்
 
இந்தியாவின் நிலவுப் பயணத் திட்டமான சந்திரயான்-2 விண்கலத் தொகுப்பின் பயணம் இதோ முக்கியக் கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது.
நிலவின் சுற்றுவட்டப் பாதையில் இயங்கிக்கொண்டிருக்கும் சந்திரயான் விண்கலத் தொகுப்பில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் என்ற தரையிறங்கு கலன் நிலவின் மேற்பரப்பில் சனிக்கிழமை அதிகாலை 1.30 முதல் 2.30 மணிக்குள் மெதுவாகத் தரையிறங்குவதே அந்த வரலாற்றுத் தருணம்.
 
இந்தத் தருணத்தை எதிர்நோக்கி இஸ்ரோ விஞ்ஞானிகள் உள்ளிட்ட, இந்தியாவின் விண்வெளி ஆய்வு சமூகம் ஆர்வத்தோடு காத்திருக்கிறது.
 
ஜூலை 22ம் தேதி சென்னை அருகே உள்ள ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் சந்திரயான் வின்கலத் தொகுப்பு ஏவப்பட்டது.
 
முதலில் புவி சுற்றுவட்டப் பாதையை அடைந்து அதில் சுற்றிக் கொண்டிருந்த சந்திரயான் 2, பிறகு அதில் இருந்து விடுபட்டு நிலவின் சுற்றுவட்டப் பாதைக்கு மாறிச் செல்லும் பயணத்தைத் தொடங்கியது. பிறகு அது நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்தது. நேரடியாக நிலவை நோக்கிப் பயணிக்காமல் இப்படி சுற்றுவட்டப் பாதையில் பல வாரங்கள் எடுத்துக் கொண்டு பயணிக்கும் தொழில்நுட்பம், எரிபொருளை மிச்சப்படுத்தும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டது என்பது இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ-வின் கருத்து.
 
சந்திரயான் விண்கலத் தொகுப்பு, ஒன்றுக்குள் ஒன்று அடங்கிய மூன்று பாகங்களை உடையது. எல்லாவற்றையும் உள்ளடக்கிய சுற்றுவட்டக் கலனில் இருந்து பிரிந்த விக்ரம் என்று பெயர் சூட்டப்பட்ட தரையிறங்கு கலன் 'மென் தரையிறக்கம்' மூலம் நிலவைத் தொடும். அதன் பிறகு, விக்ரம் கலனில் இருந்து பிரக்யான் என்று பெயர் சூட்டப்பட்ட ஆய்வு ஊர்தி வெளியேறி நிலவின் தரைப் பரப்பை ஆராயும்.
 
விக்ரம் லேண்டர் நிலவின் தென்துருவப் பகுதியில் தரையிறங்கும் கடைசி 15 நிமிடங்கள் தொழில்நுட்பரீதியாக மிக முக்கியமான கட்டம் என்று கூறப்படுகிறது.