வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 26 டிசம்பர் 2024 (16:28 IST)

மாணவி பாலியல் வன்கொடுமை எதிரொலி: மாணவ, மாணவிகளுக்கு அண்ணா பல்கலை கட்டுப்பாடு..!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவ, மாணவிகளுக்கு பல்கலைக்கழக நிர்வாகம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
முதல் கட்டமாக, அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை பலப்படுத்த ஐந்து பேர் கொண்ட நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு, மாணவர்களுக்கு தேவையான பாதுகாப்பு வசதிகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
இந்த நிலையில், பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்களுக்கு சில கட்டுப்பாடுகள் மற்றும் அறிவுறுத்தல்களை அறிவித்துள்ளது. இதன்படி, பல்கலைக்கழக செக்யூரிட்டிகள் அடையாள அட்டை கேட்டால் காண்பிக்க மாணவ, மாணவிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
மேலும், விடுதியில் தங்கி உள்ள மாணவர்கள் மாலை ஆறு முப்பது மணிக்கு விடுதிக்கு திரும்ப வேண்டும் என்ற வகையில் விதிகளில் மாற்றம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. வெளியே செல்வது, தாமதமாக திரும்பு வருவதாக இருந்தால், ஹாஸ்டல் வார்டனிடம் முன்கூட்டிய அனுமதி பெற வேண்டும் என்றும், தகவல் அளிக்காமல் விடுதிக்கு தாமதமாக வந்தால் பெற்றோர்களிடம் தகவல் தெரிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
 
பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அலுவலர்கள் விதிமுறைகளை பின்பற்ற பல்கலைக்கழக நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
 
 
 
Edited by Mahendran