1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 27 ஆகஸ்ட் 2019 (08:42 IST)

வியக்கவைக்கும் நிலவின் இரண்டாவது புகைப்படம்: சந்திரயான் 2 கேமரா மூலம் பதிவான பள்ளத்தாக்குகள்

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திரயான் 2 விண்கலத்தில் பொருத்தப்பட்ட கேமராவில் இரண்டாவது முறையாக பதிவான நிலவின் புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக, கடந்த ஜூலை மாதம் 22 ஆம் தேதி சந்திரயான் 2 விண்கலம், ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. புவியை சுற்றி வந்த விண்கலம், கடந்த 14 ஆம் தேதி நிலவை நோக்கி பயணித்தது. கடந்த 20 ஆம் தேதி நீள்வட்டபாதைக்குள் சந்திரயான் 2 விண்கலம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

விண்கலத்தில் பொருத்தப்பட்டிருக்கும் எல்.ஐ.4 கேமரா மூலமாக கடந்த 21 ஆம் தேதி, நிலவை முதன்முறையாக படம்பிடித்து அனுப்பியது. இந்நிலையில் விண்கலத்தில் பொருத்தப்பட்டிருக்கும் டி.எம்.சி.2 கேமரா மூலம் தற்போது இரண்டாவது முறையாக அனுப்பியுள்ளது. இந்த புகைப்படங்கள் கடந்த 23 ஆம் தேதி அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் நிலவின் மூன்று புகைப்படங்கள் இருப்பதாக தெரிகிறது.

முதல் படத்தில் ஜேக்சன், மித்ரா, கோரோவ் ஆகிய பள்ளத்தாக்குகள் தெரிகின்றன. இதில் ஜேக்சன் 71 கி.மீ. விட்டமும், மித்ரா 92 கி.மீ. விட்டமும், கோரோவ் 437 கி.மீ.விட்டமும் பரப்பளவு கொண்டுள்ளதாக தெரிகிறது. இரண்டாவது புகைப்படத்தில் சோமர்பெல்ட் மற்றும் கிர்க்வூட் பள்ளத்தாக்குகள் தெரிகின்றது. முதலாவது பள்ளத்தாக்கு 160 கி.மீ.விட்டமும், இரண்டாவது பள்ளத்தாக்கு 68 கி.மீ. விட்டமும் கொண்டுள்ளதாக அறியப்படுகிறது. இந்த புகைப்படங்கள் இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.