வெடித்தது மக்கள் போராட்டம் - அல்ஜீரியா அதிபர் எடுத்த புதிய முடிவு
அல்ஜீரிய அதிபர் அப்தலசீஸ் பூத்தஃபீலிகா ஏப்ரல் 18-ம் தேதி நடக்கவிருந்த அதிபர் தேர்தலை தள்ளி வைத்திருக்கிறார் மேலும் ஐந்தாவது முறையாக போட்டியிடமாட்டேன் என தெரிவித்திருக்கிறார்.
முன்னதாக அதிபர் பூத்தஃபீலிகா அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்ததையடுத்து கடந்த சில வாரங்களாக அல்ஜீரியாவில் போராட்டம் வெடித்தது.
அவர் கடந்த 20 ஆண்டுகளாக அல்ஜீரியாவுக்கு தலைமை தாங்கிவருகிறார். ஆனால் 2013-ல் பக்கவாதம் வந்தபிறகு அரிதாகவே பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.
பூத்தஃபிலிக்கா பெயரில் வெளியிடப்பட்ட அறிக்கையில், புது தேர்தலுக்கான தேதிகள் இதுவரை முடிவு செய்யப்படவில்லை ஆனால் அமைச்சரவை மாற்றம் மிக விரைவில் நடக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தேர்தல் தள்ளி வைக்கப்படும் சூழலில் அதிபர் பதவியை விட்டு இறங்குவாரா என்பது குறித்த கேள்விகளுக்கு அவரது அறிக்கையில் எந்த விளக்கமும் இல்லை.
இதற்கிடையில் அல்ஜீரியாவில் பிரதமர் அஹமத் ஓயாஹியா ராஜினாமா அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதையடுத்து உள்துறை அமைச்சர் நூறுடீன் பெடோய் புதிய அரசை அமைக்கும் பொறுப்பை ஏற்றுள்ளார் என பிரபல செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.