செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 6 ஆகஸ்ட் 2024 (11:43 IST)

வங்கதேசத்தில் உள்ள 13,000 இந்தியர்கள் மீட்கப்படுவார்களா.? அனைத்து கட்சி கூட்டத்தில் அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்..!!

Meeting
வன்முறையால் கலவர பூமியாக மாறி உள்ள வங்கதேசத்தில் இருந்து இந்தியர்களை வெளியேற்ற வேண்டிய நிலை தற்போது இல்லை என்று டெல்லியில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இட ஒதுக்கீடு விவகாரத்தில் வங்கதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன. இந்த போராட்டங்கள் வன்முறைகளாக மாறியதால் 300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு தரப்பிலும் பலர் கொலை செய்யப்பட்டனர்.
 
இந்த போராட்டத்தின் உச்சகட்டமாக ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததோடு, நாட்டை விட்டு வெளியேறினார். இந்நிலையில் வங்கதேசம் விவகாரம் குறித்து ஆலோசனை நடத்த டெல்லியில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. 

இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, ஜெய்சங்கர், எதிர்க்கட்சித் தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்துக்கு தங்களை அழைக்கவில்லை என ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

இந்தக் கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், வங்கதேச நிலைமை தொடர்பாக மத்திய அரசு தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து வருகிறது என்றார். தற்போதைய நிலையில் வங்கதேசத்தில் இருந்து 12,000 முதல் 13,000 இந்தியர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டிய அவசர நிலைமை இல்லை என்றும் இருந்தாலும் நிலைமையை கண்காணித்து வருகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.

 
மேலும் ஷேக் ஹசீனா தமது அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக தெரிவிக்கும் வரை காத்திருக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.