ரஷ்ய தாக்குதலில் தரைமட்டமான உக்ரைன் பள்ளி! – 21 பேர் பலி!
உக்ரைன் மீது ரஷ்யா தொடர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் பள்ளி கட்டிடம் இடிந்து 21 பேர் இறந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்து 25 நாட்கள் நெருங்கியுள்ள நிலையில் உக்ரைனின் பல பகுதிகளை ரஷ்ய ராணுவம் கைப்பற்றியுள்ளது. தொடர்ந்து நடந்து வரும் தாக்குதலால் இரு தரப்பினரும் உயிரிழந்துள்ளனர்.
உக்ரைனின் முக்கிய பகுதிகளான கிவ், கார்கிவ் பகுதிகளில் ரஷ்யா குண்டுமழை பொழிந்து வருகிறது. சமீபத்தில் கிழக்கு உக்ரைனின் கார்கிவ் நகருக்கு அருகே மெரேபாவில் பள்ளிக்கட்டிடம் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் பள்ளி கட்டிடம் மற்றும் சமுதாய கூடம் இடிந்து தரைமட்டமானது.
போருக்கு பயந்து பள்ளி கட்டிடத்தில் பதுங்கியிருந்த 21 பொதுமக்கள் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 25 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். துறைமுக நகரமான மரியுபோலில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தஞ்சமடைந்திருந்த தியேட்டர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அங்கு பதுங்கியிருந்தவர்கள் நிலைமை குறித்து தகவல்கள் தெரியவரவில்லை.
பொதுமக்கள் பதுங்கியுள்ள கட்டிடங்களையும் ரஷ்ய ராணுவம் தாக்கி வருவதால் பதுங்கு குழிகள், கட்டிடத்தின் அடித்தளங்களில் பதுங்கியுள்ள மக்கள் மரண பீதியில் உள்ளனர்.