மீண்டும் சொதப்பும் தவெக?!.. ஈரோட்டில் 75 ஆயிரம் பேர் கலந்துகொள்ள முடியுமா?...
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கரூர் சென்றிருந்தபோது நிறைய பேர் உயிரிழந்த சம்பவம் அந்த கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. அந்த சம்பவத்தால் தவெக ஒரு மாத காலம் முடங்கியது. தற்போதுதான் அந்த கட்சியும் அந்த கட்சியின் தலைவர் விஜயும் அதிலிருந்து மீண்டிருக்கிறார்கள்.
எனவே, மீண்டும் தனது சுற்றுப்பயணத்தை துவங்க விரும்பிய விஜய் கடந்த 5ம் தேதி சேலத்தில் மக்களை சந்திக்க அனுமதி கேட்டார். ஆனால் தமிழக போலீசார் அனுமதி கொடுக்கவில்லை. எனவே அதே நாளில் புதுச்சேரியில் ரோட் ஷோ நடத்த திட்டமிட்டார் விஜய். ஆனால் அங்கும் போலீசார் அனுமதிக்கவில்லை. அதே நேரம் புதுச்சேரியில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளித்திருக்கிறார்கள்.
ஒருபக்கம் கொங்கு மண்டலத்தை கையில் வைத்திருக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சமீபத்தில் தவெகவில் இணைந்தார். தற்போது ஈரோட்டில் தவெகவை வலுப்படுத்தும் முயற்சியில் செங்கோட்டையன் ஈடுபட்டிருக்கிறார். இதன் தொடர்ச்சியாக வருகிற 16-ஆம் தேதி ஈரோட்டில் பொதுக்கூட்டம் நடத்த செங்கோட்டையன் தரப்பில் போலீசாரிடம் அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டது. அதில் அந்த கூட்டத்தில் 75 ஆயிரம் பேர் வரை கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஈரோடு பவளத்தம்பாளையத்தில்தான் இந்த பொதுக்கூட்டத்திற்கு தவெக அனுமதி கேட்டது. ஆனால் அந்த இடத்தில் ஆய்வு செய்த ஈரோடு எஸ்பி இங்கு 75 ஆயிரம் பேர் கூட முடியாது. எனவே வேறு இடத்தை தேர்வு செய்யுங்கள் என தெரிவித்திருக்கிறார். எனது வேறு இடத்தை தேடும் முயற்சியில் செங்கோட்டையன் தரப்பில் ஈடுபட்டிருக்கிறது.
சரியான திட்டமிடல் இல்லாமல் கரூரில் பல ஆயிரம் மக்கள் கூடி அங்கு 41 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு பின்னரும் தவெக இன்னும் திருந்தவில்லை என திமுக ஆதரவாளர்கள் சமூகவலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.