உசைன் போல்ட்டின் சாதனையை முறியடித்த ரோபோ.. 26 வினாடிகள் குறைவு..
உலகின் அதிவேக மனிதராக அறியப்படும் ஜமைக்கா ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட் 100 மீட்டர் ஓட்டத்தில் படைத்த உலக சாதனையை, சீனாவில் உருவாக்கப்பட்ட மனித உருவ ரோபோ ஒன்று முந்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2009-ம் ஆண்டு பெர்லினில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் உசைன் போல்ட் 100 மீட்டர் தூரத்தை 9.58 விநாடிகளில் கடந்து சாதனை படைத்தார். பல ஆண்டுகளாக முறியடிக்கப்படாமல் இருந்து வந்த இந்த சாதனையை, சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஹானர் உருவாக்கிய லைட்னிங் என்ற ரோபோ 9.32 விநாடிகளில் கடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெய்ஜிங்கில் தொடங்கிய 2-வது உலக மனித உருவ ரோபோ விளையாட்டுப் போட்டிக்கான முன்னோட்ட சோதனையின்போது இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. அப்போது ரோபோ அதிகபட்சமாக மணிக்கு சுமார் 52 கி.மீ. வேகத்துக்கு இணையான வேகத்தை எட்டியதாக கூறப்படுகிறது.
இதற்கு முன்பாக ஏப்ரல் மாதம் நடைபெற்ற பெய்ஜிங் அரை மாரத்தான் போட்டியிலும் லைட்னிங் பங்கேற்றது. 21 கி.மீ. தூரத்தை 50 நிமிடங்கள் 26 விநாடிகளில் கடந்து கவனம் பெற்றிருந்தது.
செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோட்டிக்ஸ் தொழில்நுட்பத்தில் சீனா தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் நிலையில், மனிதர்களுடன் இணைந்து பணியாற்றக்கூடிய ரோபோக்களை தொழிற்சாலை, போக்குவரத்து, லாஜிஸ்டிக்ஸ் உள்ளிட்ட துறைகளில் பயன்படுத்தும் முயற்சிகளும் வேகமெடுத்து வருகின்றன.
Edited by Siva

