Breaking Bad நடிகர் ஆர்.ஜே. மிட்டே மரணம்... ரசிகர்கள் அதிர்ச்சி
உலகம் முழுவதும் பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட பிரபல அமெரிக்க தொலைக்காட்சி தொடர் Breaking Bad . வின்ஸ் கில்லிகன் உருவாக்கிய இந்த தொடர் 2008 முதல் 2013 வரை ஐந்து சீசன்களாக ஒளிபரப்பாகி சர்வதேச அளவில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. பிரையன் கிரான்ஸ்டன், ஆரோன் பால் உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவான இந்த தொடரில் இடம்பெற்ற கதாபாத்திரங்களும் ரசிகர்கள் மத்தியில் தனித்த அடையாளத்தைப் பெற்றன.
இந்த தொடரில் வால்டர் ஒயிட்டின் மகன் Walter White Jr. என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் ஆர்.ஜே. மிட்டே. Breaking Bad தொடர் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான அவர், தனது 34 வயதில் உயிரிழந்துள்ளார். டெக்சாஸ் மாகாணத்தின் Brownsville பகுதியில் மிட்டே உயிரிழந்ததை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
ஆர்.ஜே. மிட்டேவின் வாழ்க்கைக்கும் அவர் நடித்த Walter White Jr. கதாபாத்திரத்திற்கும் முக்கியமான ஒற்றுமை இருந்தது. சிறு வயதிலேயே Cerebral Palsy எனப்படும் பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்ட மிட்டே, தனது நிஜ வாழ்க்கை அனுபவங்களையே நடிப்பிலும் இயல்பாக வெளிப்படுத்தினார். இதனால் Breaking Bad தொடரில் அவரது நடிப்பு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே பாராட்டைப் பெற்றது.
நடிகராக மட்டுமல்லாமல் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் மற்றும் திரைத்துறையில் அவர்களுக்கான பிரதிநிதித்துவம் குறித்தும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார் மிட்டே. United Cerebral Palsy உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்ட அவர், மாற்றுத்திறனாளிகள் குறித்த தவறான பார்வைகளை மாற்றுவதற்கான விழிப்புணர்வு பணிகளிலும் ஈடுபட்டார். தனது Mitte Foundation மூலமாகவும் பல்வேறு சமூகப் பணிகளை மேற்கொண்டார்.
Breaking Bad தொடருக்குப் பிறகு Switched at Birth, The Guardians of Justice உள்ளிட்ட தொடர்களிலும், The Recall, The Oak Room, Triumph உள்ளிட்ட திரைப்படங்களிலும் அவர் நடித்தார். சமீபத்தில் தனது புதிய படமான Talking to Strangers ஐ விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்று வந்தார்.
இந்த நிலையில் ஆர்.ஜே. மிட்டே தற்கொலை செய்து கொண்டதாக சில அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும், அவரது பிரதிநிதிகள் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் மரணத்திற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில், பிரேதப் பரிசோதனைக்குப் பின்னரே மரணத்திற்கான காரணம் தெரியவரும் என கூறப்படுகிறது.

