புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By Sasikala

மிகவும் சுவையான காளான் தொக்கு செய்ய...!!

தேவையான பொருட்கள்:
 
காளான் - 200 கிராம் 
பெரிய வெங்காயம் - 3
தக்காளி - 3
பச்சை மிளகாய் - 3
கறிவேப்பிலை - தேவையான அளவு
எண்ணெய் - 50 மில்லி
கடுகு - 1 டேபிள் ஸ்பூன்
தனியா தூள் - 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
சீரக பொடி - 1/2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் - தேவையான அளவு

செய்முறை:
 
முதலில் காளானை சிறிதாக நறுக்கி வைத்து கொள்ளுங்கள். வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாயை சிறிதாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை போட்டு பிறகு நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை போட்டு வெங்காயம் நன்றாக  வதங்கும் வரை கிளறி, பின்னர் வெங்காயம் வதங்கியதும் தக்காளியை போட்டு வதக்குங்கள். 
 
ஒரு 2 நிமிடங்கள் வதக்கிய பிறகு மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து விடுங்கள். தக்காளி நன்றாக வதங்கியதும் அதில் மசாலா பொடிகளான மிளகாய் தூள், தனியா தூள், சீரக தூள் இவைகளை போட்டு நன்றாக வதக்குங்கள்.
 
மசாலா சிறிது வதங்கியதும் நறுக்கி வைத்திருக்கும் காளானை போட்டு மசாலா எல்லா இடங்களிலும் படும்படி கிளறி விட்டு ஒரு 5 நிமிடங்கள் வேக வையுங்கள். 5 நிமிடங்கள் கழித்து மூடியை திறந்து மீண்டும் லேசாக கிளறி விடுங்கள். இப்பொழுது காளான் நன்றாக வெந்திருக்கும் அருமையான காளான் தொக்கு தயார்.
 
காளான் தொக்கு சப்பாத்தி, பூரி, தோசை, இட்லி, சாதம், இடியப்பம் போன்ற பொருட்களுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.