செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

சுவையான பீன்ஸ் பருப்பு உசிலி செய்வது எப்படி....?

தேவையான பொருள்கள்:
 
பீன்ஸ் - 100 கிராம் 
துவரம் பருப்பு - 25 கிராம் 
கடலைப் பருப்பு - 25 கிராம் 
மிளகாய் வத்தல் - 3
சீரகம் - 1 தேக்கரண்டி 
பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி 
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி 
உப்பு - தேவையான அளவு 
 
தாளிக்க தேவையான பொருட்கள்:
 
எண்ணெய் - 4 மேஜைக்கரண்டி 
கடுகு - 1/2 தேக்கரண்டி 
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
 
துவரம் பருப்பு, கடலைப் பருப்பு இரண்டையும் தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய பிறகு தண்ணீரை நன்கு வடித்து விட்டு அதோடு காயத்தூள்,  மிளகாய் வத்தல், சீரகம், சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
 
பிறகு பருப்பு கலவையை வடை போல் தட்டி இட்லி பாத்திரத்தில் 10 நிமிடம் வைத்து வேக வைத்து சிறிது நேரம் ஆற விடவும். ஆறிய பிறகு கையால் உதிர்க்கவும் அல்லது மிக்ஸ்சியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுத்தால் கலவை மென்மையாகி விடும்.
 
பீன்ஸை பொடிதாக நறுக்கி வைக்கவும். ஒரு கடாயில் 50 மில்லி தண்ணீர் ஊற்றி அதோடு நறுக்கி வைத்துள்ள பீன்ஸ், மற்றும் உப்பு சேர்த்து தண்ணீர் வற்றும்  வரை வேகவைத்து தனியே எடுத்து வைக்கவும்.
 
அடுப்பில் அதே கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை சேர்க்கவும். பிறகு அதனுடன் உதிர்த்து வைத்துள்ள பருப்பு கலவையை சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து பொன்னிறமாகும் வரை கிளறவும். பிறகு அதனுடன் மஞ்சள்தூள், மற்றும் பீன்ஸை  சேர்த்து நன்றாக கிளறி உப்பு சரி பார்த்து அடுப்பை அணைக்கவும். சுவையான பீன்ஸ் பருப்பு உசிலி தயார்.