சினிமா ஒத்திகை என மாதவன் கூறினார் : போலி அதிகாரி பிரபாகரன் புலம்பல்
தீபாவின் கணவர் மாதவன் தனக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாகவும், அதற்கான ஒத்திகை எனக்கூறியும் தன்னை போலி வருமான வரித்துறை அதிகாரியாக நடிக்க சொன்னார் என கைதான பிரபாகரன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை, ஜெ.வின் அண்ணன் மகள் தீபாவின் வீட்டில் தன்னை வருமான வரித்துறை அதிகாரி எனக் கூறிக் கொண்டு ஒருவர் வந்தார். அவருக்கு போலீசாரும் பாதுகாப்பு அளித்தனர். ஊடகங்களும் தீபாவின் வீட்டின் முன்பு குவிந்தன.
அப்போது போலீசார் எழுப்பிய கேள்விகளுக்கு அந்த நபர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். மேலும், திடீரென அந்த ஆசாமி அருகிலிருந்து சுவர் வழியாக ஏறி தப்பி ஓடினர். இதைக்கண்ட போலீசார் அவரை விரட்டிப் பிடிக்க முயன்றனர். ஆனால், அவர் தப்பி ஓடி விட்டார்.
அந்நிலையில், தன்னுடைய புகைப்படம் மற்றும் வீடியோவும் வெளியாகி, போலீசாரும் தன்னை தேடுவதை உணர்ந்த அந்த நபர் நேற்றிரவு மாம்பலம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். பிரபாகரன் என்ற பெயரை கொண்ட அந்த நபர் போலீஸ் விசாரணையின்போது தன்னை வருமான வரித்துறை அதிகாரி போல் நடிக்க சொன்னது தீபாவின் கணவர் மாதவன்தான் என வாக்குமூலம் அளித்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது.
விழுப்புரத்தை சேர்ந்த எம்.பி.ஏ. பட்டதாரியான அவர், விழுப்புரம் மற்றும் பாண்டிச்சேரியில் ஹோட்டல் நடத்தி வருவதாகவும், தன்னுடைய ஹோட்டலுக்கு தீபாவின் கணவர் மாதவன் வந்த போது அவருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும் பிரபாகரன் கூறியுள்ளார். மேலும், தனக்கு சினிமாவில் நடிக்க ஆர்வம் இருப்பதை தெரிந்த மாதவன் அதற்கு உதவி செய்கிறேன் என வாக்குறுதி கொடுத்ததாகவும் கூறியுள்ளார்..
இந்நிலையில், காவல் நிலையத்தில் பிரபாகரம் பேசும் வீடியோ வெளியாகியுள்ளது.
என்னை திரைப்படத்தில் நடிக்க வைப்பதாக கூறிய மாதவன், இரண்டு நாட்களுக்கு முன்பு கொரியரில் எனக்கு ஒரு ஆவணத்தை அனுப்பினார். அதில் ஒரு போலி ஐடி அதிகாரி அடையாள அட்டை இருந்தது. அதைத்தொடர்ந்து சென்னை வந்து அவரை நேரில் சந்தித்தேன். அப்போது ஒரு வாரண்ட் நகலை என்னிடம் கொடுத்து தீபாவின் வீட்டிற்கு சென்று வருமான வரித்துறை அதிகாரி போல் நடிக்க வேண்டும் எனக் கூறினார். நான் தயங்கினேன். அதற்கு அவர் ‘எல்லாம் நடிப்புதான். இது ஒரு ஒத்திகை’ எனக் கூறினார்.
அவர் கூறியது போலவே நான் தீபாவின் வீட்டிற்கு சென்று வருமான வரித்துறை அதிகாரி போல நடித்தேன். ஆனால், அங்கு ஊடகங்கள் குவிந்துவிட்டன. அதைக் கண்டதும் எனக்கு பயம் வந்துவிட்டது. எனவே, இதுபற்றி அவரிடம் மாதவனிடம் தொலைப்பேசியில் கூற, அவர்தான் என்னை தப்பி ஓட சொன்னார் என பிரபாகரன் அந்த வீடியோவில் பேசியுள்ளார்.
இதைத்தொடர்ந்து பிரபாகரன் மீது 5 பிரிவுகளில் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மாதவன் செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருப்பதால் அவரிடம் போலீசார் விசாரணை செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.