டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து பேசியது என்ன? எடப்பாடி பழனிசாமி பேட்டி..!
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில், அரசியல் களம் மிகுந்த விறுவிறுப்பை எட்டியுள்ளது. பிரதமர் மோடியின் தமிழக வருகையை தொடர்ந்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திடீரென டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
இன்று காலை டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, முறையான அழைப்பின் பேரிலேயே தான் டெல்லி வந்ததாக குறிப்பிட்டார். அமித்ஷாவுடனான சந்திப்பில் தமிழக அரசியல் நிலவரம் மற்றும் தேர்தல் வியூகங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மிகவும் வலுவாக இருப்பதாகவும், சில புதிய கட்சிகள் கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார்.
சசிகலா தொடர்பான கேள்விகளை தவிர்த்த அவர், திமுக கூட்டணியில்தான் குழப்பம் நிலவுவதாகவும், அதிமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்றும் உறுதிபட தெரிவித்தார். தொகுதி பங்கீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் தேர்தல் தேதிக்கு பின் வெளியாகும் என அவர் விளக்கமளித்தார்.
Edited by Siva