செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By VM
Last Updated : செவ்வாய், 23 அக்டோபர் 2018 (12:19 IST)

ஓட்டலில் நள்ளிரவில் தனக்கு நேர்ந்த அனுபவம்: ஸ்ரீதேவிகா பகீர் புகார்

பாலியல் புகார்களை மறைக்க பார்ப்பதாக மலையாள நடிகர் சங்கத்தை நடிகை ஸ்ரீதேவிகா கடுமையாக சாடி உள்ளார்.
மலையாளத்தில் முன்னணி  நடிகை ஸ்ரீதேவிகா. இவர் தமிழில், ராமகிருஷ்ணா, ஞாபகங்கள் மற்றும் அந்தநாள் ஞாபகம், அன்பே வா ஆகிய  படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் மலையாள நடிகர் சங்கம் சார்பில் நடிகர் சித்திக் மற்றும் பழம்பெரும் நடிகை லலிதா ஆகியோர் பேட்டி  அளித்தபோது ‘மீ டூ’ விவகாரம் தொடர்பாக நடிகர் சங்கத்துக்கு இதுவரை நடிகைகளிடம் இருந்து எந்த புகாரும் வரவில்லை என்றனர்.  இதற்கு ஸ்ரீதேவிகா  கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து தனது முகநூலில் ஸ்ரீதேவிகா கூறியிருப்பதாவது, கடந்த 2006ல் ஒரு படத்தில் நடித்தபோது நட்சத்திர ஓட்டலில் நள்ளிரவில் எனது  அறை கதவை யாரோ தட்டினர். நான் திறக்கவில்லை. தொடர்ந்து 2, 3 நாட்கள் இதுபோல் கதவு தட்டும் சத்தம் கேட்டது. ஓட்டல்  நிர்வாகத்தினரிடம் கண்காணிக்க செய்து படத்தின் இயக்குனர்தான் அப்படி செய்தார் என்பதை அறிந்தேன்.
 
இதுகுறித்து படத்தின் கதாநாயகனிடம் சொன்னதால் இயக்குனர் என்னிடம் கடுமையாக நடந்தார். எனது காட்சிகளை குறைத்தார். பேசிய  சம்பளமும் தரவில்லை. இதுகுறித்து நடிகர் சங்கத்தில் புகார் செய்தும் பலன் இல்லை. அப்போது நடிகர் சங்க செயலாளராக இருந்தவர் இதை  பெரிது படுத்தாதே உன் சினிமா வாழ்க்கை நாசமாகி விடும் என்றார். இப்போது மீண்டும் கடிதம் அனுப்பியும் வரவில்லை என்கிறார்கள். “புகார்  எதுவும் வரவில்லை என்று சங்க நிர்வாகிகள் கூறுவது அதிர்ச்சி அளிக்கிறது. பாலியல் புகார்களை மறைக்க பார்க்கிறார்கள்” இவ்வாறு  ஸ்ரீதேவிகா கூறியுள்ளார்.