வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சின்னத்திரை
  3. தொலைக்காட்சி
Written By
Last Updated : வெள்ளி, 1 மார்ச் 2019 (21:42 IST)

மீண்டும் வருகிறது லொள்ளு சபா – முதல்படமாக விஸ்வாசம் ?

சில வருடங்களுக்கு முன்பாக தமிழ் சின்னத்திரையுலகில் காமெடி தர்பார் நடத்திய லொள்ளு சபா இப்போது மீண்டும் புதிய வடிவில் ஒளிப்பரப்பாக இருப்பதாக தகவல்கள் வெளியாக ஆரம்பித்துள்ளன.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சி ஒளிப்பரப்பானக் காலகட்டததை விட இப்போது இணையதளங்களில் வெகுப் பிரபலமாக இருந்து வருகிறது. வாரம் ஒரு தமிழ் படத்தை எடுத்துக்கொண்டு அதன் அபத்தம், ஓவர் செண்ட்டிமெண்ட் மற்றும் சண்டைக்காட்சிகளை நக்கலடித்து அதன் ஸ்பூப் வடிவமாக வெளியாகிக்கொண்டிருந்தது. இது ரசிகர்களுக்கு அளவில்லா மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் சினிமா தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் அதிருப்தியடைந்து போலிஸில் புகார் அளிக்கும் அளவுக்கு சென்ற சம்பவங்களும் உண்டு. சொல்லப்போனால் தமிழ்ப்ப்டம் போன்ற ஸ்பூப் படங்களின் முன்னோடி என லொள்ளு சபாவைக் கூறலாம்.

இதில் நடித்த சந்தானம், ஜீவா, சாமிநாதன், சேஷு மற்றும் இயக்கிய ராம்பாலா மற்றும் முருகானந்த் ஆகியோர் அதன் பிறகு தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தகுந்த இடத்தை அடைந்தனர். ஆனால் சிலபல காரணங்களால் இந்த நிகழ்ச்சியைத் தொடர முடியாமல் விஜய் டிவி கைவிட்டது. ஆனால் அதன் பிறகு யுடியூப் மற்றும் ஹாட்ஸ்டார் போன்ற ஸ்டிரிமிங் தளங்களின் வருகைக்குப் பின்னர் இந்த நிகழ்ச்சியின் சில பல எபிசோடுகள் வைரல் ஆக ஆரம்பித்தன. நாயகன், கிழக்குச் சீமையிலே, யாரடி நீ மோகினி, ஆறிலிருந்து அறுபது வரை போன்ற படங்களின் லொள்ளு சபா வெர்ஷன் இப்போதும் இணையவாசிகளின் ஆல்டைம் பேவரைட்.

இப்போதும் தொடர்ந்து கிடைத்துவரும் அதீத வரவேற்பை அடுத்து விஜய் தொலைக்காட்சி மீண்டும் இந்த நிகழ்ச்சியின் சீசன் 2 வைத் தொடங்க இருக்கிறது. இம்முறை சந்தானம் மற்றும் ஜீவா நடுத்த கதாபாத்திரங்களில் அமுதவாணன் நடிக்க இருப்பதாகவும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை இயக்கிய தாம்சன் இதை இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சீசன் இரண்டின் முதல் படமாக இந்தாண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமான விஸ்வாசம் படததினை நக்கல் அடிக்க இருக்கிறது லொள்ளு சபா. ரொம்பப் பன்னுவோம் என சொல்லும் லொள்ளு சபாவைக் காண ரசிகர்கள் மிகவும் ஆவலாக இருக்கின்றனர்.