திங்கள், 30 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By
Last Updated : வெள்ளி, 8 பிப்ரவரி 2019 (19:54 IST)

பேயுடன் ஜல்சா பண்ணும் சந்தானம்! தில்லுக்கு துட்டு 2 திரைவிமர்சனம்!

நடிகர் சந்தானம் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ‘தில்லுக்கு துட்டு ‘ படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று மெகாஹிட் ஆனது. அதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாவது பாகம் பிப்ரவரி 7 வெளியாகி வெற்றிநடைபோட்டு வருகிறது. இந்த படத்தை பற்றிய விமர்சன அலசலை இங்கே காணலாம். 


 
நடிப்பு - சந்தானம், ஷ்ரிதா சிவதாஸ், ராஜேந்திரன், ஊர்வசி மற்றும் பலர்
தயாரிப்பு - ஹேன்ட் மேட் பிலிம்ஸ்
இயக்கம் - ராம்பாலா
இசை - ஷபிர்
நேரம் - 2 மணி நேரம் 2 நிமிடம்
ரேட்டிங் -  7.5/10.
வெளியான தேதி - 7 பிப்ரவரி 2019
 
பேயை மரண கலாய் கலாய்த்து நம் வயிறை புண்ணாக்கும் சந்தானம் மீண்டும் தனக்கு உரித்தான பாணியில் நடித்து தூள் கிளப்பியுள்ளார். தமிழ் சினிமாக்களில் எத்தனையோ பேய் படங்கள் வந்திருந்தாலும் பேய் படம் என்றவுடன் அடுத்த நொடி நம் நினைவுக்கு வருவது ராகவா லாரன்ஸின் முனி , காஞ்சனா படங்கள் தான். அந்த அளவிற்கு நகைச்சுவையுடன் திகில் காட்சிகளை கலந்து பேய் படம் என்றால் இது தான் என்று ஆணி அடித்தாற்போல் போல் சொல்லிவிட்டனர். 
 
அந்த இடத்தை சந்தானம் தற்போது தன் நகைச்சுவை கலந்த திகில் நடிப்பினால் தில்லுக்கு துட்டு 2 படத்தில் பூர்த்திசெய்துவிட்டார். இயக்குனர் ராம்பாலா, சந்தானத்தின் நகைச்சுவை உணர்வை ஒரு காட்சியில் கூட வீணாக்காமல் படம் முழுவதும் முழுமையாகப் பயன்படுத்தி ஆடியன்ஸை இடைவிடாது சிரிக்க வைத்துவிட்டார். 
 
கதைக்களம்:-   
 
ஆட்டோ டிரைவரான வெள்ளை விஜி (சந்தானம்) மற்றும் அவரது மாமா மொட்டை ராஜேந்திரனும் சேர்ந்து ஏரியாவில் இருக்கும் அக்கம் பக்கத்தினரை விடாமல் டார்ச்சர் செய்து கொண்டும் கலாய்த்துக்கொண்டும் இருக்கிறார். இந்நிலையில் கதாநாயகியான மாயா நர்ஸாக வேலை பார்க்கும் மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் கார்த்திக் அவரிடம் ஐ லவ் யூ சொல்லிவிட்டு பேயிடம் அடிவாங்குகிறார். பின்னர் அவருக்கு ஒரு யோசனை வருகிறது. அவருடைய பக்கத்து வீட்டுக்காரரான வெள்ளை விஜி (சந்தானம்) மீது கடுப்பில் இருக்கும் அந்த டாக்டர், விஜியை பழிவாங்க மாயாவிடம் திட்டமிட்டு காதலிக்க வைக்கிறார். 
 
ஷ்ரிதாவிடம் யார் வந்து காதல் சொன்னாலும் ஒரு பேய் அவர்களை அடித்துத் துவைத்துவிடும். அப்படி ஒரு முறை அடி வாங்கியவர்தான் டாக்டர் கார்த்திக். அவரது திட்டம் போலவே சந்தானமும், ஷ்ரிதாவும் பழக ஆரம்பிக்கிறார்கள். காதலில் விழுந்த சந்தானம், ஷ்ரிதாவிடம் காதலை சொல்லும் போது பேய் வந்து சந்தானத்தைப் புரட்டி எடுக்கிறது. 
 
பின்னர் தான் தெரிகிறது அந்த பெண்ணின் தந்தை ஒரு மலையாள சூனியக்காரர் என்றும் அந்த பெண்ணிடம் யார் காதலை சொன்னாலும் அவர்களை போய் அடித்து தும்சம் செய்யும் அளவிற்கு ஒரு சூனியத்தை வைத்துள்ளார் என்றும் தெரியவருகிறது. இந்த உண்மை தெரிந்ததும் மந்திரவாதி மாமனாரை சந்திக்க செல்கிறார் சந்தானம். இறுதியில் என்ன ஆனது மாயாவின் மீதிருந்த அந்த சூனியத்தை சந்தானம் நீக்கினாரா இல்லையா என்பது தான் மீதிக்கதை.
 
 
படத்தின் பிளஸ்: 
 
படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் என்றால் அது சந்தானமும் , மொட்டை ராஜேந்திரனும் தான். காதல் காட்சிகளை குறைத்து காமெடியை அதிகரித்தது மிக பெரிய ப்ளஸ். இது போன்ற சந்தானத்தை தான் நம் ரசிகர்களும் எதிர்பார்க்கின்றனர். வழக்கம் போல தனது கவுண்டர் வசனத்தால், ஆரம்பம் முதல் க்ளைமாக்ஸ் வரை படத்தில் வரும் எல்லோரையும் கலாய்த்து தள்ளி விடுகிறார்.காமடியோடு படத்தில் திகளையும் ரசிகர்களும் சேர்த்து கொடுத்திருக்கிறார். சவுண்ட் எபக்ட்ஸ்ஸில் நிச்சயம் நன்றாக ஸ்கொர் செய்திருக்கிறார் இசையமைப்பாளர். மேலும், கடைசி நேரத்தில் மொட்டை ராஜேந்திரனின் ஒரு கதவு சீன் வரும் பாருங்க அதற்கு தொடர்ந்து 10 நிமிடம் சிரித்துகொண்டே இருப்பீங்க. 
 
படத்தின் மைனஸ் : 
 
காமெடி படமாக எடுத்துக்கொண்டால் படத்தில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பெரிய மைனஸ் எதுவும் இல்லை. அதே போல படத்தின் இரண்டாம் பாதியில் பல இடத்தில் மலையாலத்திலேயே வசனத்தை பேசுவது கொஞ்சம் வெறுப்பை தருகிறது. ஆனால், அதற்கு சப் டைட்டில் போடறாங்க அதனால ஓகே. கதாநாயகியை மையப்படுத்தி நகரும் கதை என்றாலும் அவருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது போல தோன்றவில்லை. 
 
 
இறுதி அலசல் : 
 
இரண்டாம் பாதியை போலவே முதல் பாதியிலும் இன்னும் கொஞ்சம் காமெடி நெடியை அதிகரித்திருக்கலாம்.  இரண்டாம் பாகம் அவ்வளவாக ரசிகர்களை கவருவதில்லை. ஆனால், இந்த படம் பேய் படத்திற்கெல்லாம் ஒரு விதிவிலக்காக அமைந்துள்ளது. சந்தானம் இஸ் பேக் ஒரு என்றே சொல்லலாம். கண்டிப்பாக வயிறு குலுங்க சிரித்து சிரித்து பார்க்ககூடிய படமாக இது அமைந்துள்ளது. 
 
மொத்தத்தில் இந்த படத்திற்கு வெப்துனியாவின் மதிப்பு 7.5/10.