"பொன்னியின் செல்வன் 2-ம் பாகமும் இப்படியிருந்தால் விளைவுகளை சந்திக்க நேரிடும்: இயக்குநர் வ.கெளதமன்
பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகமும் இதே போல் இருந்தால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என இயக்குனர் கௌதமன் எச்சரிக்கை விடுத்துள்ளார். பொன்னியின் செல்வன் படம் குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த இயக்குனர் கவுதமன் கூறியிருப்பதாவது:
தமிழ் நிலத்தை சோழ பேரரசு மட்டுமே 350 ஆண்டுகளாக ஆண்ட வரலாறு உண்டு. இந்த திரைப்படத்தை தமிழனாக இருந்து சொல்லவில்லை என்றாலும் வரலாற்றை சொல்லி இருக்க வேண்டும்.
சோழர்களின் சின்னமான புலி கொடியை ஒரு இடத்தில் கூட காட்டவில்லை என்றால் அப்படி என்ன வரலாற்று ஆய்வு செய்து உள்ளார்கள் எனக் கேள்வியெழுப்பிய அவர், ஜெயமோகன் சோழர்கள் தெலுங்கர்கள் என குறிப்பிடுகிறார், படைப்பாளிகள் உண்மையை பேச வேண்டும், ஆளுமையோடு படைப்பை உருவாக்க வேண்டும்.
இது போன்ற வரலாற்றை மடைமாற்றும் செயல்கள் இரண்டாம் பாகத்தில் இடம் பெற்றிருந்தால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும். தமிழர்களை திரட்டி மிகப் பெரிய போராட்டம் நடத்துவோம். இவ்வாறு இயக்குனர் கவுதமன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Edited by Siva