1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 30 டிசம்பர் 2019 (09:03 IST)

உலக ரேபிட் செஸ் போட்டி: சாதனை நிகழ்த்திய இந்திய வீராங்கனை!

ரஷ்யாவில் நடைபெற்ற உலக ரேபிட் செஸ் போட்டியில் இந்திய வீராங்கனை கோனெரு ஹம்பி வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.

உலகளவிலான ரேபிட் செஸ் போட்டி ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்றது. இதில் பெண்கள் பிரிவில் உலகம் முழுவதிலிருந்தும் 122 வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் இந்திய வீராங்கனை கோனெரு ஹம்பியும் கலந்து கொண்டார்.

தனக்கு குழந்தை பிறந்ததால் கடந்த 2016 முதல் ஓய்வில் இருந்த க்ராண்ட்மாஸ்டரான கோனெரு ஹம்பி கடந்த ஆண்டு முதல் ரேபி செஸ் போட்டிகளில் மீண்டும் விளையாடி வருகிறார். இந்நிலையில் மாஸ்கோவில் நடைபெற்ற ரேபிட் செஸ் போட்டியில் சீன வீராங்கனை லீ டிங்ஜீயை தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார் ஹம்பி.

இறுதி ஆட்டம் டிராவில் முடிய, டை பிரேக்கரில் 2-1 என்ற கணக்கில் வென்று உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். இதற்கு முன் 2017ல் விஸ்வநாதன் ஆனந்த் ஆண்கள் பிரிவில் இந்த பட்டத்தை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.