வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 6 ஜனவரி 2019 (11:41 IST)

வெற்றியின் விளிம்பில் இந்தியா – தட்டிப் பறிக்கும் வானிலை ?

சிட்னியில் நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வெற்றி பிரகாசமாக உள்ள நிலையில் மோசமான வானிலைக் காரணமாக போட்டி தடைபட்டுள்ளது.

சிட்னியில் 3 ஆம் தேதி தொடங்கிய நான்காவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதல் இன்னிங்ஸில் 622 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. புஜாரா மற்றும் ரிஷப் ப்ண்ட் அருமையாக விளையாடி முறையே 193 ரன்கள் மற்றும் 159 ரன்கள் சேர்த்தனர். மயங்க் அகர்வால் மற்றும் ஜடேஜாவின் அரைசதமும் இந்தியாவின் வலுவான ஸ்கோருக்கு உதவியது.

அதையடுத்து பேட் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 300 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து பாலோ ஆன் ஆனது. ஆஸ்திரேலிய அணி 30 ஆண்டுகளுக்குப் பின்னர் தனது சொந்த மண்ணில் பாலோ ஆன் ஆவது இதுவே முதல்முறை. ஆஸியின் ஹாரிஸ் மட்டும் ஓரளவுத் தாக்குப் பிடித்து 79 ரன்கள் சேர்த்து, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். இந்தியா தரப்பில் சிறப்பாக பந்து வீசிய குல்தீப் யாதவ் 5 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

322 ரன்கள் பின் தங்கிய நிலையில் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி ஆடிய ஆஸ்திரேலிய அணி 6 ரன்கள் சேர்த்திருந்த போது மோசமான வானிலைக் காரணமாக ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.

நேற்று மாலையும் வானிலைக் காரணமாக போட்டி சீக்கிரமே முடித்து வைக்கப்பட்டது. அதையடுத்து இன்று காலையும் சுமார் மூன்று மணி நேரம் ஆட்டம் தாமதாகத் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. மோசமான வானிலைக் காரணமாக இந்தியாவின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.