1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 24 மார்ச் 2020 (07:51 IST)

இந்து முஸ்லீமாக அல்லாமல் மனிதனாக சிந்தியுங்கள் – சோயிப் அக்தர் அட்வைஸ் !

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளரான சோயிப் அக்தர் நெருக்கடி காலத்தில் ஏழைகளைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள் என மக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்குதல் உலகையே முடக்கிப் போட்டுள்ளது. வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் தங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை மக்கள் வாங்கிக் குவிக்க ஆரம்பித்துள்ளனர்.

இதுகுறித்து தனது இணையப் பக்கத்தில் பேசியுள்ள சோயிப் அக்தர் ‘நாம் அனைவரும் ஒருங்கிணைந்த சக்தியாகச் செயல்பட வேண்டும். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் நீங்கள் மக்களை சந்தித்து பேசி எந்த பலனும் இல்லை. தேவைக்கதிகமான பொருட்களை வாங்கி பதுக்காதீர்கள். தினக்கூலிகளாக இருக்கும் ஏழைகளைப் பற்றி நினைத்துப் பாருங்கள். அவர்கள் எப்படி தங்கள் குடும்பத்துக்கு உணவளிக்க முடியும். இந்த நேரத்தில் மனிதர்களாக மக்களைப் பற்றி சிந்தியுங்கள். இந்துவாகவோ, இஸ்லாமியராகவோ சிந்திக்காதீர்கள். நாம் ஒருவருக்கொருவரை கவனித்துக்கொள்ளும் நேரம் இது. பிரிந்து செல்வதற்கான நேரமில்லை.’ எனத் தெரிவித்துள்ளார்.