இளம்வீரருக்கு வாய்ப்பு வழங்கிய புவனேஷ்வர் குமார்
கடைசி 3 போட்டிகளில் ஒரு விக்கெட் கூட வீழ்த்தாத புவனேஷ்கர் குமாருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை கைவிட்ட இந்திய அணி, ஒருநாள் போட்டி தொடரை 4-1 என்ற புள்ளிக்கணக்கில் தொடரை வென்று சாதனை படைத்துள்ளது.
6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 5 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் இன்று 6வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி சூப்பர் ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நடைபெறுகிறது. தொடரை கைப்பற்றியது நிம்மதி அளிக்கிறது. இறுதிப்போட்டியிலும் வெற்றி பெறுவோம் என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.
இந்நிலையில் கடைசி ஒருநாள் போட்டிக்கான அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக ஷர்துல் தாகூர் அணியில் இடம்பிடித்துள்ளார். 26 வயதான ஷர்துல் தாகூர் 2017ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடினார். இவர் வலது கை மீடியம் பாஸ்ட் பவுலர்.
இந்த ஒருநாள் தொடர் முழுக்க சுழற்பந்து வீச்சாளர்களான சாஹல் மற்றும் குல்தீப் அதிகளவிலான விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். வேகப்பந்து வீச்சாளர்கள் பெரிதாக ஜொலிக்கவில்லை. புவனேஷ்வர் குமார் கடைசி 3 போட்டிகளில் விக்கெட் ஏதுவும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஷர்துல் தாகூருக்கு தற்போது வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.