வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: சனி, 9 பிப்ரவரி 2019 (16:42 IST)

தேர்தலில் போட்டியா ? பாஜக வில் நானா ?– சேவாக் திட்டவட்டம்

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் பாஜகவில் இணைந்து மக்களவைத் தேர்தலில் போட்டியிட இருப்பதாக வெளியானத் தகவலை சேவாக் மறுத்துள்ளார்.

2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் எழுந்ததாக சொல்லப்பட்ட மோடி அலை இப்போது படுத்துவிட்டது. நாடு முழுவதும் பாஜக வின் செல்வாக்குக் குறைந்து வருகிறது. அதற்கு சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக அடைந்த படுதோல்வியே சான்று. ஏற்கனவே தென் இந்தியாவில் பாஜக வின் செல்வாக்குப் பற்றி சொல்லத் தேவையில்லை. இந்நிலையில் வடமாநிலங்களிலும் செல்வாக்குக் குறைவதைக் கண்டு பாஜக பதட்டத்தில் உள்ளது.

இதனால் இம்முறை புதிய திட்டங்களை தேர்தலில் செயல்படுத்த பாஜக முடிவு செய்துள்ளது. அதற்காக  சினிமா நட்சத்திரங்கள் மற்றும் விளையாட்டு வீரர்களை தங்கள் கட்சிப் பலவீனமாக உள்ள தொகுதிகளில் நிறுத்த முடிவு செய்துள்ளது. பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார், மலையாள நடிகர் மோகன் லால் ஆகியோர் பாஜக சார்பில் போட்டியிடப் போவதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அவர்கள் தரப்பில் இருந்து இதை மறுத்து உள்ளனர்.

அதுபோல ஹரியானா மாநிலத்தில் உள்ள ரோஹ்தர்  தொகுதியில் சேவாக்கை நிறுத்த பாஜக முயன்று வருவதாகவும் அதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. குறிப்பிட்ட அந்தத் தொகுதியில் பாஜக தொடர்ந்து 3 முறையாக போட்டியிட்டுத் தோல்வியடைந்துள்ளதால் சேவாக்கை நிறுத்தி வெற்றிபெற முயல்வதாகக் கூறப்பட்டது.

ஆனால் இந்தத் தகவலை இப்போது சேவாக் மறுத்துள்ளார். இதுகுறித்துத் தனது டிவிட்டரில் ‘2014-ம் ஆண்டு வந்த வதந்திதான், தற்போதும் உலா வருகிறது. இதில் புதிதாக சொல்ல எதுவுமில்லை. இந்த தகவலில் துளியும் உண்மையில்லை. அப்போதும் தேர்தலில் போட்டியிடவில்லை. இப்போதும்  இல்லை. எப்போதுமே தேர்தலில் போட்டியிடும் எண்ணம் எனக்கு இல்லை’ எனத் திட்டவட்டமாக இந்தத் தகவலை மறுத்துள்ளார்.