மோடி வருகை – அலர்ட் மோடில் திருப்பூர் !
நாளை பிரதமர் மோடி பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக திருப்பூர் வர இருப்பதால் பாதுகாப்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
மோடி தமிழகத்திற்கு வரும் போதெல்லாம் பொதுமக்களும் பெரியாரிய இயக்கங்களும் அவருக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் கருப்புக்கொடிக் காட்டுவது, கோபேக் மோடி ஹேஷ்டேக்கை டிரண்ட் செய்வது என போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சென்னையில் பாதுகாப்புத் துறை கண்காட்சியை திறந்துவைக்க வந்திருந்த மோடி இத்தகைய போராட்டங்களால் நேரடியாக விமானநிலையத்தில் இருந்து கண்காட்சிக்கு அழைத்து செல்லப்பட்டார். சாலைகளில் கருப்புக்கொடி காட்டிய போராட்டக்காரர்களை அவர் கண்ணில் படாமல் பார்த்துக்கொண்டது ஆளும் அதிமுக அரசு. ஆனால் சமூக வலைதளங்களில் கோபேக் மோடி டிரண்ட் செய்யப்பட்டதும் ராட்சச கருப்பு பலூன்களை வானில் பறக்க விட்டதும் தேசிய ஊடகங்களிலும் செய்தியானது.
இரண்டாவது முறையாக சமீபத்தில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவுக்காக வந்த போதும்m இது தொடர்ந்தது. மோடி தலைமையிலான பாஜக அரசு முன்னேறிய சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளதை எதிர்த்து கருப்புக்கொடிக் காட்டும் போராட்டமும் கோபேக் மோடியும் டிரண்ட் ஆனது. இம்முறை கோபேக் மோடி உலக அளவில் டிரண்ட் ஆனது.
அதையடுத்து நாளை மீண்டும் மூன்றாவது முறையாக தேர்தல் பரப்புரைக்காக திருப்பூர் வர இருக்கிறார். இம்முறையும் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடக்கும் என பெரியாரிய உணர்வாளர்கள் தெரிவித்துள்ளனர் இதனால் திருப்பூரில் மோடி வர இருக்கும் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப் படுத்தப்பட்டுள்ளன.
திருப்பூரில் பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கும் மோடி அதன் பின்னர் நடக்கும் அரசு நலத்திட்டங்கள் வழங்கும் விழாவிலும் கலந்து கொள்ள இருக்கிறார். விரிவாக்கப்பட்ட மெட்ரோ ரயில் சேவை மற்றும் திருப்பூரில் தொடங்க இருக்கும் இ.எஸ்.ஐ. மருத்துவமனைத் தொடக்க விழா ஆகியவற்றையும் தொடங்கி வைக்க இருக்கிறார். விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடிப் பழனிச்சாமியும் கலந்து கொள்ள இருக்கிறார்.