வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 9 பிப்ரவரி 2019 (16:06 IST)

அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா – பாஜக குறித்து தம்பிதுரை நக்கல் பேச்சு !

அதிமுக வின் மத்திய அமைச்சரும் மக்களவைத் துணை சபாநாயகருமான தம்பித்துரை அதிமுக மற்றும் பாஜக கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் எதுவும் நடக்கவில்லை எனக் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக-காங்கிரஸ்-விசிக-மதிமுக-இடது சாரிகள் அடங்கியப் பலமானக் கூட்டணி உருவாகியுள்ளது. அதுபோல அதிமுக-பாஜக-பாமக-தேமுதிக அடங்கியக் கூட்டணி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் திமுக அணியைப் போல அதிமுக அணியில் இன்னும் வெளிப்படையாக எதுவும் அறிவிக்கப்படவில்லை.

அதிமுக விலேயே இரண்டுப் பிரிவுகள் உருவாகி ஒரு அணி பாஜகவோடுக் கூட்டணி வைக்க வேண்டும் எனவும் மற்றொரு அணி பாஜக கூட்டணி வேண்டாம் எனவும் கூறிவருவதாகத் தெரிகிறது. இந்த இரண்டு அணிக்கும் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இருவரும் மறைமுகமாகத் தலைமையேற்று வருகின்றனர். யார் எந்த அணிக்குத் தலைமை வகிக்கிறார்கள் என்பது சொல்லாமலேயே உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

பாஜக கூட்டணி வேண்டாம் என சொல்பவர்களில் அதிமுக மத்திய அமைச்சரும் மக்களவைத் துணை சபாநாயகருமான தம்பிதுரை முக்கியமானவர். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 10 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிரான அவரது உரை ஒரு எடுத்துக்காட்டு. ஆனால் பாஜக குறித்த தம்பிதுரையின் எதிர்மறை விமர்சனத்தை அவரது சொந்தக் கருத்து அதிமுக தலைமை மழுப்பி வருகிறது.

அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் தம்பிதுரை கலந்துகொள்ளாமல் தவிர்த்து விட்டார். பாஜக வோடு கூட்டணியை விரும்பாத்தால்தான் இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாகத் தெரிகிறது. இந்நிலையில் பாஜக கூட்டணிக் குறித்த கேள்விக்கு ’பாஜக வோடுக் கூட்டணி என்பது அத்தைக்கு மீசை முளைத்த கதைதான். பாஜக வோடுக் கூட்டணிக் குறித்து இதுவரை நாங்கள் பேசவேயில்லை. ஏன் திரும்ப திரும்ப அந்தக் கேள்வியைக் கேட்கிறீர்கள். தமிழக பாஜக தலைவர் தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளை இனி வளரவிடமாட்டோம் எனக் கூறி வருகிறார். அப்படி இருக்கையில் நாங்கள் மட்டும் எப்படி தேசியக் கட்சியை வளரவிடுவோம். எங்களுக்கு சுயமரியாதை இருக்கிறது. தமிழகத்திற்கு யார் நன்மை செய்கிறார்களோ அவர்களோடுதான் கூட்டணி ‘ எனக் கூறியுள்ளார்.

இதனால் பாஜக –அதிமுக கூட்டணிக்கான நிகழ்தகவு மீண்டும் குறைந்துள்ளது