1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 7 ஆகஸ்ட் 2024 (09:23 IST)

பாலிவுட் இயக்குனர்கள் இப்போது வினேஷ் போகத் பயோபிக்குக்கு தயாராகி இருப்பார்கள்… நெட்டிசன்கள் கொந்தளிப்பு!

பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக்ஸ் விளையாட்டு போட்டிகள் நாளுக்கு நாள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டி வருகின்றன. இந்தியா இன்னும் ஒரு தங்கப் பதக்கம் கூட வெல்லவில்லை. சில வெண்கலப் பதக்கங்கள் மட்டுமே கிடைத்துள்ளன.  முதலிடத்துக்கு அமெரிக்காவுக்கும் சீனாவும் கடுமையாக போட்டி போட்டு வருகின்றன.

இந்நிலையில் இந்திய ரசிகர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக பெண்களுக்கான மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் 50 கிலோ எடைப் பிரிவின் அரையிறுதிப் போட்டியில் கியூபா வீராங்கனையை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். இதன் மூலம் அவர் பதக்கத்தை உறுதி செய்துள்ளார். அவர் தங்கம் வெல்ல வேண்டும் என்பது 140 கோடி இந்தியர்களின் ஆசையாக உள்ளது.

வினேஷ் போகத் கடந்த ஆண்டு சக வீராங்கனைகள் மீதான பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக போராடினார். அப்போது அவர் மிகவும் கடுமையான அடக்குமுறைகளை எதிர்கொண்டார். அப்போது அவருக்கு ஆதரவாக இந்தியாவின் மற்ற துறை விளையாட்டு வீரர்களோ, பாலிவுட் பிரபலங்களோ குரல் கொடுக்கவில்லை. இந்நிலையில் இப்போது அவர் பதக்கத்துக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் பாலிவுட் இயக்குனர்கள் அவரின் பயோபிக்கை இயக்கி கல்லா கட்ட தயாராகி இருப்பார்கள் என இணையத்தில் நெட்டிசன்கள் கொந்தளித்து வருகின்றனர்.