ஞாயிறு, 3 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By mahendran
Last Modified: புதன், 21 ஜூலை 2021 (16:29 IST)

விரக்தியின் உச்சத்தில் இருக்கிறோம்… இலங்கை பயிற்சியாளரின் செயலால் சர்ச்சை!

இலங்கை அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் மைதானத்துக்குள் சென்று கேப்டனோடு வாக்குவாதம் செய்தது சர்ச்சைகளை எழுப்பியுள்ளது.

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நேற்று கொழும்பு மைதானத்தில் நடைபெற்ற 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதனை அடுத்து இந்திய அணி தொடரை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் 69 ரன்கள் எடுத்து, 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்திய தீபக் சஹார் வெற்றிக்கு வித்திட்டார் என்பதும் அவர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒரு கட்டத்தில் விக்கெட்டுகளை இழந்து தோல்வியை நோக்கி சென்று கொண்டிருந்த போது பொறுப்புடன் விளையாடி தீபக் சஹார் கடைசி வரை அவ்ட் ஆகாமல் 69 ரன்களை சேர்த்து வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இதனால் எளிதாக இருந்த வெற்றி பெறும் வாய்ப்பை இலங்கை கோட்டை விட்டது. இந்த தோல்வியால் அந்த அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் கோபமாகி மைதானத்துக்குள்ளேயே சென்று கேப்டன் ஷனகாவோடு வாக்குவாதம் செய்தார். இது சம்மந்தமான வீடியோ இணையத்தில் வெளியாகி சர்ச்சைகளைக் கிளப்பியது.

அதற்கு பதிலளிக்கும் விதமாக மிக்கி ஆர்தர் ‘எங்கள் இருவருக்கும் இடையே நடந்தது ஆரோக்யமான உரையாடல்தான். அணியை வளர்க்கவே நாங்கள் பாடுபடுகிறோம். நாங்கள் இருவருமே இப்போது விரக்தியின் உச்சத்துக்கு சென்றுவிட்டோம். நாங்கள் நினைத்ததை முடிக்க முடியவில்லை. எங்கள் உரையாடலை தவறாக சித்தரிக்க வேண்டாம்’ எனக் கூறியுள்ளார்.