1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 29 மார்ச் 2025 (08:47 IST)

மோசமான ஃபீல்டிங் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது… சி எஸ் கே கேப்டன் ருத்துராஜ் கருத்து!

ஐபிஎல் தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டிகளில் ஒன்றாக சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதும் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் பெங்களூர் அணி சென்னை அணியை 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, தங்கள் இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது.

டாஸ் வென்று முதலில் பந்துவீச முடிவு செய்தது சி எஸ் கே. அதன்படி பேட் செய்ய வந்த ஆர் சி பி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழந்து 196 ரன்கள் சேர்த்தது. அந்த அணியில் பில் சால்ட், கோலி, தேவ்தத் படிக்கல் ஆகியோர் கணிசமான ரன்களை அடிக்க, ரஜத் படிதார் அரைசதம் அடித்துக் கலக்கினார். ரஜத் படிதாரின் மூன்று கேட்ச்களை சிஎஸ்கே வீரர்கள் கோட்டை விட்டது அவர் பெரிய ஸ்கோர் அடிக்க உதவியது.

இந்நிலையில் போட்டி முடிந்ததும் பேசிய சிஎஸ்கே கேப்டன் ருத்துராஜ் “இந்த மைதானத்தில் இலக்கு என்பது 170 ரன்கள்தான். ஆனால் நாங்கள் அதைவிட 20 ரன்கள் அதிகமாகக் கொடுத்துவிட்டோம். எங்கள் மோசமான ஃபீல்டிங் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியது. நாங்கள் பேட் செய்ய வரும் போது பிட்ச் மெதுவாகிவிட்டது. பவர்ப்ளே ஓவர்களில் அதிரடியாக ஆடவேண்டும். ஆனால் இன்று(நேற்று) அது நடக்கவில்லை” எனக் கூறியுள்ளார்.