அர்ஜெண்டினா, இத்தாலி கால்பந்து வீரர்களுக்கு கொரோனா!
உலகம் முழுவதும் மக்களை பலி கொண்டு வரும் கொரோனா வைரஸ் கால்பந்து வீரர்களையும் தாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலி கொண்டுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆரம்பத்தில் சீனாவில் வேகமாக கொரோனா பரவி வந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக அது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஆனால் இத்தாலியில் நிலைமை மிக சிக்கலாகியுள்ளது. கடந்த மூன்று மாதத்தில் சீனாவில் ஏற்பட்ட உயிரிழப்புகளை காட்டிலும் அதிகமான உயிரிழப்புகளை கடந்த ஒரு மாத காலத்திற்குள் சந்தித்துள்ளது இத்தாலி.
இத்தாலி மக்களை கொன்று குவித்து வரும் இந்த வைரஸுக்கு இத்தாலிய கால்பந்து வீரர்கள் மட்டுமல்லாது அர்ஜெண்டினா கால்பந்து வீரர்களும் சிக்கியுள்ளனர். பிரபல அர்ஜெண்டினா வீரர் பவுலா டைபாலா கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டாக்ராமில் பதிவிட்டவர் தனக்கும், தனது காதலிக்கும் கொரோனா இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இத்தாலி கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் ஏ.சி.மிலன் மற்றும் அணியின் தொழில்நுட்ப தலைவர் பாலோ மல்டினி அவரது மகன் என பலருக்கும் கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் அவர்களோடு தொடர்பில் இருந்த சக வீரர்களும் தொடர் கண்காணிப்பில் உள்ளனர்.