1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : திங்கள், 23 மார்ச் 2020 (18:07 IST)

சென்னைக்கு மட்டும் 144 தடையா? ஆட்சியருடன் முதல்வர் ஆலோசனை

சென்னை, காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு மாவட்டங்களை தனிமைப்படுத்துவது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்த இருக்கிறார்.

நாடு முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நேற்று மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.

இதனால் கூட்ட நெரிசலால் சிக்கி தவிக்கும் சென்னை தெருக்கள் ஆள் நடமாட்டம் இல்லாமல் அமைதியாக கிடந்தது. தற்போது மத்திய அரசு கொரோனா அபாயம் உள்ள மாவட்டங்கள் என இந்தியாவில் உள்ள 80 மாவட்டங்களை அறிவித்துள்ளது. அந்த மாவட்டங்களை மற்ற மாவட்டங்களிடமிருந்து தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அந்த 80 மாநிலங்கள் கொண்ட பட்டியலில் தமிழகத்தின் தலைநகரமான சென்னை, காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களும் உள்ளன. இந்த மாவட்டங்களை பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வர அறிவுறுத்தியுள்ள நிலையில் அதுகுறித்த ஆலோசனைகளை மேற்கொள்ள மூன்று மாவட்ட ஆட்சியர்களும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளனர்.

கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளில் தமிழகம் தீவிரமாக செயல்பட்டு வருவதால் இந்த மூன்று மாவட்டங்களுக்கும் மற்ற மாநிலங்களை போல ஊரடங்கு அல்லது 144 தடை போன்றவை ஏற்படுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.