அரசு சர்வாதிகாரியாக செயல்பட வேண்டும் – சிவசேனா சஞ்சய் ராவத் கருத்து!
நாடு முழுவதும் நேற்று மக்கள் ஊரடங்கு அமல்படுத்தியது குறித்து பேசியுள்ள சஞ்சய் ராவத் அரசு சர்வாதிகாரமாக செயல்பட வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நேற்று நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதை தொடர்ந்து பல மாநிலங்கள் ஊரடங்கை மார்ச் 31 வரை நீட்டித்துள்ளன. தமிழகத்தில் இன்று காலை 5 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.
மக்கள் ஊரடங்கு குறித்து கருத்து தெரிவித்துள்ள சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் ”இந்த ஊரடங்கு செயல்பாட்டை கடந்த வாரமே செயல்படுத்தி இருக்க வேண்டும். ஒருநாள் ஊரடங்கு செய்வதால் எந்த பயனும் இல்லை. இந்திய அரசு சீனாவை போல சர்வாதிகாரமாக செயல்பட வேண்டும். அவர்கள் மக்களை மிகவும் கறாராக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததால்தான் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். மென்மையாக நடந்து கொள்ள இது நேரமல்ல” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் ”மாட்டிறைச்சி உண்பவர்களை கொல்வது, பாரத் மாதா கீ ஜே கோஷங்களை எழுப்புவதை விட ஒருவருக்கொருவர் உதவுவதன் மூலம் நாட்டிற்கு பெரிய சேவையை செய்ய இது நல்ல தருணம்.” என்றும் கூறியுள்ளார்.