பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வரும் நிலையில் ஒலிம்பிக்ஸில் தங்கம் வென்ற வீரர் உறங்க இடமில்லாமல் பூங்கா மரத்தடியில் படுத்துக் கிடந்த புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் இந்த முறை ப்ரான்ஸில் நடந்து வரும் நிலையில் நாளுக்கு நாள் சர்ச்சைகளும் அதிகரித்து வருகிறது. பல போட்டிகளில் ஏற்பாடுகளில் மெத்தனம், கவனக்குறைவு உள்ளதாக பல வீரர்களே புகார் அளித்து வருகின்றனர். இந்நிலையில் வீரர்கள் தங்குவதிலேயே தற்போது பிரச்சினை எழுந்துள்ளது.
அனைத்து நாட்டு வீரர்களும் தங்குவதற்காக பாரிஸ் ஒலிம்பிக்ஸ் கமிட்டி ஏற்பாடு செய்த அறைகளில் ஏசியே இல்லை. பாரிஸில் தற்போது வெயில் வாட்டி வரும் நிலையில் ஏசி இல்லாமலும், சரியான படுக்கை வசதிகள், கழிப்பறை வசதிகள் இல்லாமலும் இருப்பதால் பல நாட்டு வீரர்கள் வேறு சில ஸ்டார் ஓட்டல்களுக்கு மாறியுள்ளனர். இந்திய அரசு சமீபத்தில் இந்திய வீரர்கள் கஷ்டப்படுவதால் 40 இன்ஸ்டண்ட் ஏர் கூலர்களை வாங்கி அளித்தது. ஆனால் இத்தாலி அரசு அந்த வசதியையும் தங்களது வீரர்களுக்கு செய்து தரவில்லை.
பாரிஸ் ஒலிம்பிக்ஸ் போட்டியில் நீச்சல் போட்டியில் தங்கம் வென்ற செக்கோன் என்ற இத்தாலியை சேர்ந்த நீச்சல் வீரர் தான் தங்கியுள்ள அறை ஏசி இல்லாமல் சூடாக இருந்ததால் அருகே உள்ள பூங்கா ஒன்றிற்கு சென்று மரத்தடியில் படுத்து தூங்கியுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் பலரும் இதுதான் ஒலிம்பிக்ஸ் நடத்துற லட்சணமா? என பாரிஸ் ஒலிம்பிக் கமிட்டியை விமர்சித்து வருகின்றனர்.
Edit by Prasanth.K