ஆண்கள் கிரிக்கெட்டில் பெண் நடுவர் – சாதனைப் படைத்த கிளாரி போலோசாக் !
சர்வதேச ஆண்கள் கிரிக்கெட்டில் பெண் ஒருவர் நடுவராக இருக்கும் சாதனையை இன்று நிகழ்த்த இருக்கிறார் ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிளாரி போலோசாக்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 31 வயதாகும் கிளாரி போலோசாக் கடந்த 2016 ஆம் ஆண்டுமுதல் பெண்கள் கிரிக்கெட்டில் களநடுவராகப் பணியாற்றி வருகிறார். 2018-ல் நடந்த பெண்கள் உலகக்கோப்பை டி-20 அரையிறுதிப் போட்டியில் நடுவராக செயல்பட்டார். இதுவரை 15 ஒரு நாள் போட்டியில் நடுவராகச் செயல்பட்டுள்ள இவர் இன்று சர்வதேசக் கிரிக்கெட்டில் புது வரலாற்றைப் படைக்க இருக்கிறார்.
நடைபெற்று வரும் உலகக் கிரிக்கெட் லீக் டிவிஷன்- 2 தொடரில் இறுதிப்போட்டியில் நமீபியா மற்றும் ஓமன் அணிகள் இன்று மோதுகின்றன. அதில் களநடுவராக கிளாரி பணியாற்ற இருக்கிறார். இது குறித்து ஐசிசி தனது டிவிட்டர் பக்கத்தில் ’கிளாரி போலாசாக் இண்று வரலாற்று சாதனைப் படைக்கப் போகிறார்’ என அறிவித்துள்ளது.
இந்த வரலாற்று சிறப்புமிக்க தருணம் குறித்து பேசியுள்ள கிளாரி ‘ஆண்கள் கிரிக்கெட்டில் நடுவராக பணியாற்றுவது மிகவும் பெருமையாக இருக்கிறது. பெண்களுக்கு எதிராக இருக்கும் பல்வேறு தடைகளை உடைப்பதாக இந்நிகழ்வு இருக்கும். இதனால் பெண்கள் அதிகளவில் இந்த துறை நோக்கி வர விழிப்புணர்வை ஏற்படுத்தும்’ எனத் தெரிவித்துள்ளார்.