ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : சனி, 3 ஆகஸ்ட் 2024 (14:40 IST)

3-வது பதக்க வாய்ப்பு..! நூலிழையில் தவறவிட்ட மனு பாக்கர்..!!

Manu Pakker
பாரீஸ் ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் இறுதிச்சுற்றில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் நூலிழையில் 3வது பதக்கத்தைப் பெறும் வாய்ப்பை இழந்தார்.
 
2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரானது ஜுலை 25ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. பதக்க வேட்டையை தொடங்கியிருக்கும் உலகநாடுகளுக்கு இடையே, 117 பேர் கொண்ட குழுவுடன் பயணித்துள்ள இந்தியா, துப்பாக்கி சுடுதலில் 3 பதக்கங்களை வென்று தன் கணக்கை துவங்கியுள்ளது. மற்ற இந்திய விளையாட்டு வீரர்கள் முக்கியமான சுற்றில் பதக்கத்தை வெல்ல முடியாமல் போராடிவரும் நிலையில், துப்பாக்கி சுடுதல் வீரர்கள் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றனர்.
 
முதலில் துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் ஒற்றையர் பிரிவில் வெண்கல பதக்கம் வென்ற மனு பாக்கர், கலப்பு இரட்டையர் பிரிவிலும் வெண்கல பதக்கம் வென்று இந்தியாவிற்கான பதக்க கணக்கை தொடங்கி வைத்தார். இதன்மூலம் இந்தியாவிற்காக ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்கள் வென்ற முதல் வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை படைத்தார்.  
 
இந்நிலையில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான துப்பாக்கி சுடுதல் 25 மீட்டர் பிஸ்டல் கடைசி தகுதிச்சுற்று போட்டிகளில் பங்கேற்ற மனு பாக்கர் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தினார். தொடர்ந்து நடைபெற்ற இறுதி போட்டியில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் மற்றும் ஹங்கேரி வீராங்கனை 28 புள்ளிகள் பெற்று 3-வது இடம் பிடித்தனர். 

 
வெற்றியாளரை நிர்ணயிக்கும் ஷூட் ஆப் முறையில் ஹங்கேரி வீராங்கனை வென்று வெண்கலம் வென்றார். தென் கொரியா வீராங்கனை தங்கமும்,  பிரான்ஸ் வீராங்கனை வெள்ளிப் பதக்கமும் வென்றனர். இதன்மூலம் மனு பாக்கர் நூலிழையில் 3வது பதக்கத்தைப் பெறும் வாய்ப்பை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.