10 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு எதிர்ப்பு..! இடைக்கால ஜாமின் கோரி நிர்மலா தேவி முறையீடு..
மாணவிகளை தவறாக வழி நடத்திய வழக்கில் கிழமை நீதிமன்றம் விதித்த சிறை தண்டனையை ரத்து செய்ய கோரியும், இடைக்கால ஜாமின் வழங்க கோரியும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்னாள் பேராசிரியர் நிர்மலா தேவி மனு தாக்கல் செய்துள்ளார்.
கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய பேராசிரியை நிர்மலாதேவி வழக்கு 2018ம் ஆண்டு முதல் நடைபெற்று வந்தது. 6 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் நிர்மலா தேவி குற்றவாளி என ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் திங்கள் கிழமை தீர்ப்பு வழங்கியது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த மதுரை காமராசர் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.
நிர்மலா தேவிக்கான தண்டனை விவரங்கள் செவ்வாய் கிழமை நீதிபதி அறிவித்தார். நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும், மொத்தமாக, 2 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இந்த அபராதத் தொகையை கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு கடுங்காவல் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.
இந்நிலையில் மாணவிகளை தவறாக வழி நடத்திய வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் விதித்த சிறை தண்டனையை ரத்து செய்ய கோரியும், இடைக்கால ஜாமின் வழங்க கோரியும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்னாள் பேராசிரியர் நிர்மலா தேவி மனு தாக்கல் செய்துள்ளார்.