கோவை நூலக முறைகேடு தொடர்பாக ஸ்டாலின் பேசாதது ஏன்? அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கேள்வி!
கோவை பெரியார் அறிவுலகத்தில் போலி நூல்களை வாங்கி ஏஐ தொழில்நுட்பம் மூலம் மிகப்பெரிய நிதி முறைகேடு செய்த விவகாரத்தில், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏன் மௌனம் சாதிக்கிறார் என்று அமைச்சர் ஆதவ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெரியார் மற்றும் அண்ணாதுரையின் பெயர்களை முகமூடியாக அணிந்துகொண்டு, முந்தைய திமுக அரசு ஒவ்வொரு துறையிலும் ஊழல் செய்துள்ளது என சாடியுள்ளார். உலகிலேயே முதன்முறையாக செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி புத்தக கொள்முதலில் 'ஏஐ ஊழல்' செய்து திமுக சாதனை படைத்துள்ளதாகவும், தமிழ் அறிவுலகத்தை அவமானத்தில் கூனிக்குறுக வைத்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடித்தது மட்டுமன்றி, போலியான மற்றும் தரமற்ற புத்தகங்கள் மூலம் எதிர்கால தலைமுறையின் சிந்தனையை சூனியமாக்கும் படுபாதகத்தை திமுக அரசு செய்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். தினந்தோறும் பல்வேறு அறிக்கைகளை வெளியிடும் ஸ்டாலின், இந்த விவகாரம் வெளிவந்ததிலிருந்து அமைதியாக பதுங்கியிருப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.
மேலும், கலைஞர் நூற்றாண்டு நூலகம் உள்ளிட்ட பிற நூலகங்களிலும் ஆய்வு நடத்தப்படும் என்றும், பெரியார் அறிவுலக கட்டுமானப் பணிகளில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து வல்லுநர்கள் மூலம் விசாரிக்கப்படும் என்றும் தெரிவித்த அவர், தவறு செய்தவர்கள் நீதிமன்றத்தின் மூலம் தண்டிக்கப்படுவார்கள் என்றும் உறுதியளித்தார்.

