1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : சனி, 28 செப்டம்பர் 2019 (09:00 IST)

யார் இந்த ரூபி மனோகரன்? தேர்தலுக்கு ஏத்த வெய்ட் பார்ட்டியா?

ஒருவழியாக தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கேஎஸ் அழகிரி, மேலிடத்தின் ஒப்புதலுடன் நாங்குநேரி தொகுதிக்கான வேட்பாளரை அறிவித்துள்ளது. 
 
நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்டோபர் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. கூட்டணி கட்சிகளான திமுக - காங்கிரஸ் தங்களுக்குள் தொகுதி பங்கீடு செய்து கொண்டுள்ளன. 
 
அதன்படி விக்கிரவாண்டியில் திமுகவும், நாங்குநேரியில் காங்கிரஸும் போட்டியிடுகின்றன. திமுக வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில் காங்கிரஸும் ஒருவழியாக வேட்பாளரை அறிவித்துவிட்டது.
காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஊர்வசி அமிர்தராஜ், ரூபி மனோகரன், உட்பட 26 பேர் தேர்தலில் போட்டியிட விருப்ப மனுத் தாக்கல் செய்த நிலையில் ரூபி மனோகரனைத் தேர்வு செய்துள்ளது காங்கிரஸ் தலைமை.
 
கட்டுமானத் துரையில் ஆர்வம் கொண்ட ரூபி மனோகரனுக்கு 60 வயது ஆகிறது. ரூபி பில்டர்ஸ் குழுமத்தை துவங்கியவர் இவர்தான். 10 ஆண்டுகளுக்கு மேல் விமான நிலைய ஆணையத்தில் பணியாற்றிய முன்னாள் விமானப்படை அதிகாரியான இவர் தனது கட்டுமான நிறுவனத்தின் மூல 22 ஆண்டுகளில் 185 குடியிருப்புகளுக்கு மேல் கட்டியுள்ளார். 
காங்கிரஸ் கட்சியின் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தலைவராக இருக்கும் இவர் தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரிக்கு மிகவும் நெருக்கமானவராம். நீங்களும் பில்டர் ஆகலாம் என்ற புத்தகத்தை எழுதியுள்ள இவர், கட்டுமானத்துறையில் பல விருதுகளையும் பெற்றுள்ளார். 
 
மேலும், கன்னியாகுமரி மாவட்டம் குன்னத்தூரில் பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறார், அதோடு லயன்ஸ் கிளப்பிலும் அதிக ஈடுபாடு கொண்டவர் என்பது கூடுதல் தகவல்.