திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 27 செப்டம்பர் 2019 (13:50 IST)

நாங்குநேரியில் உள்ளூர் வேட்பாளர்களைதான் நிறுத்த வேண்டும் – காங்கிரஸ் பிரமுகர் குற்றச்சாட்டு !

நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் சார்பாக உள்ளூர் வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என அப்பகுதி காங்கிரஸார் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

தமிழகத்தில் காலியாக உள்ள சட்டசபை தொகுதிகளான நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்டோபர் 21 இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. கூட்டணி கட்சிகளான திமுக- காங்கிரஸ் தங்களுக்குள் தொகுதி பங்கீடு செய்து கொண்டுள்ளன. அதன்படி விக்கிரவாண்டியில் திமுகவும் நாங்குநேரியில் காங்கிரஸும் போட்டியிடுகின்றன. திமுக வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில் காங்கிரஸ் இன்னும் நாங்குநேரி தொகுதிக்கான வேட்பாளரை அறிவிக்கவில்லை.

நாங்குநேரி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி ஆனந்தன் உள்ளிட்ட ஏராளமானோர் விருப்பமனு கொடுத்தனர். காங்கிரஸோ நன்றாக செலவு செய்யும் வேட்பாளர்களை நிறுத்தும் முனைப்பில் அமிர்த ராஜ் மற்றும் ரூபி மனோகரன் ஆகியோர் பெயரை பரிசீலனை செய்து வருகிறது. இவர்கள் இருவரும் நாங்குநேரி தொகுதியைச் சேர்ந்தவர்கள் இல்லை.

நாங்குநேரி தொகுதியில் வெளிமாவட்ட வேட்பாளரை நிறுத்தக் கூடாது என நெல்லை மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர் ‘தேர்தலில் போட்டியிட நாங்கள் 8 பேர் விருப்பமனுத் தாக்கல் செய்துள்ளோம். எங்களில் ஒருவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும். தொகுதிக்கு வெளியில் இருந்துவரும் வேட்பாளரால், தொகுதி மக்களுக்கு பணியாற்ற முடியாது. அப்படி வெளிமாவட்டத்திலிருந்து வேட்பாளர்களை நிறுத்தினால் கட்சியை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிடுவோம்’ எனக் கூறியுள்ளார்.