சென்னையில் கனமழை ; புயல்,வெள்ளம் ஏற்படுமா? - பதில் சொல்கிறார் வெதர்மேன்
சென்னையில் தற்போது பெய்து வரும் மழை காரணமாக மக்கள் பீதியடைய தேவையில்லை என வெதர்மேன் என அழைக்கப்படும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
வானிலை அறிக்கை குறித்து அவ்வப்போது பயனுள்ள தகவல்கள் தனது பேஸ்புக் மூலம் ‘வெதர்மேன்’ என்கிற பெயரில் பிரதீப் ஜான் ஆய்வு கட்டுரைகளை எழுதிவருகிறார். 2015ம் ஆண்டு வெள்ளம் ஏற்பட்ட போது இவர் கூறியவை அனைத்தும் அப்படியே நடந்ததால், இவரின் மீது மக்களுக்கு நம்பிக்கை அதிகரித்துள்ளது. இதனால் இவரை பலரும் பேஸ்புக்கில் பின் தொடர்கின்றனர்.
இந்நிலையில், சமீபத்தில் தொடங்கிய வடகிழக்கு பருவமழை பற்றியும் அவர் தனது பேஸ்புக் புத்தகத்தில் தொடர்ந்து எழுதி வருகிறார். சமீபத்தில் அவர் ஒரு தின இதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
சென்னையில் தற்போது பெய்து வரும் மழை இயல்பானது. இந்த மழை மேலும் சில நாட்களுக்கு தொடரும். ஆனாலும், பல மணி நேரம் தொடர்ந்து கனமழை பெய்யாது. சென்னைக்கு தற்போது மழை தேவை. அப்படிப்பார்த்தால் இந்த மழை போதாது. 2015ம் ஆண்டு பெய்த மழையுடன் ஒப்பிட்டால் இது மிகவும் குறைவு.
வெள்ளம் மற்றும் புயல் அபாயம் ஏற்படும் என்ற வதந்திகளை நம்ப வேண்டும். செம்பரம்பாக்கம் ஏரி 15 சதவீதம் மட்டுமே நிரம்பியுள்ளது. சென்னையில் மற்ற ஏரிகளிலும் குறைந்த அளவே நீர் நிரம்பியுள்ளது.
அதேபோல், டிசம்பர் மாத இறுதிக்குள் மீண்டும் சுனாமி ஏற்படும் என வதந்தி பரப்பப்படுகிறது. இயற்கை பேரழிவுகளை யாராலும் முன்பே கணிக்க முடியாது. அதற்கான உபகரணங்களும் இல்லை. எனவே, அதை நம்ப வேண்டாம்” என அவர் தெரிவித்தார்.