தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் எப்போது? தேர்தல் ஆணையம் முக்கிய தகவல்
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த பணிகள் அடுத்த வாரத்திலிருந்து தொடங்கவுள்ளதாக தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளது.
தி.நகர் தொகுதி முன்னாள் அதிமுக எம்எல்ஏ சத்தியநாராயணன் தாக்கல் செய்த மனுவில், தனது தொகுதியில் 13,000 அதிமுக ஆதரவாளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாகவும், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டியிருந்தார். மேலும், 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன் வாக்காளர் பட்டியலை சரிபார்த்து முறைகேடுகளை களைய உத்தரவிட கோரியிருந்தார்.
தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா தலைமையிலான அமர்வில், தேர்தல் ஆணையம் பதிலளிக்கையில், "விரைவில் தேர்தல் நடக்கவுள்ள தமிழகம் உட்பட மாநிலங்களில் சிறப்பு தீவிர திருத்த பணிகள் அடுத்த வாரம் தொடங்கும். அப்போது மனுதாரரின் புகார்கள் கவனிக்கப்படும்" என்று உறுதியளித்தது.
தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கை அடுத்த வாரத்துக்குத் தள்ளி வைத்தனர். மேலும், பீகாரில் நடந்த திருத்த பணிகள் தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவு நகல்களை தாக்கல் செய்யுமாறும் ஆணையத்துக்கு உத்தரவிட்டனர்.
Edited by Mahendran