திமுகவில் இணைந்த விஜய்யின் முன்னாள் மேனேஜர்.. நிலவு ஒருநாள் அமாவாசையாகும் என விமர்சனம்..!
நடிகர் விஜய் புதிதாக தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தில் முக்கிய தலைவர்கள் இணையும் நிலையில், விஜய்யின் முன்னாள் மேலாளர் பி.டி. செல்வக்குமார் தி.மு.க.வில் இணைந்தது அரசியல் கவனத்தை பெற்றுள்ளது. முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில், அவர் தனது கலப்பை மக்கள் இயக்கத்தின் 100-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் தி.மு.க.வில் ஐக்கியமானார். மேலும் அவர் நிலவு ஒருநாள் அமாவாசையாகும் என விஜய்யை மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார்.
கன்னியாகுமரியை சேர்ந்த வழக்கறிஞரான செல்வக்குமார், பத்திரிகையாளராகப் பணியைத் தொடங்கி, இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். பின்னர், விஜய்யின் மக்கள் நல அலுவலராகவும், 'சுறா', 'போக்கிரி', 'வில்லு' உள்ளிட்ட பல படங்களுக்கு மக்கள் தொடர்பு அதிகாரியாகவும் இருந்துள்ளார்.
தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் பணியாற்றிய இவர், விஜய்யின் "புலி" திரைப்படத்தின் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டபோது, அப்படத்தின் தோல்வியால் நிதி சிக்கல்களை சந்தித்தார். புலி பட வெளியீட்டின்போது தனது வீட்டில் நடந்த வருமான வரி சோதனைக்கு, விஜய்யுடன் நெருக்கமாக இருந்தவர்களே காரணம் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார். இந்த சூழலில் இவரது அரசியல் மாற்றம் முக்கியத்துவம் பெறுகிறது.
Edited by Mahendran