அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய விஜய் ரசிகர்: போலீஸ் நடவடிக்கை

Arun Prasath| Last Updated: செவ்வாய், 17 செப்டம்பர் 2019 (17:43 IST)
மதுரையில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய விஜய ரசிகர் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளது.

சமீபத்தில் சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண், பல்லாவரம் அருகே மோட்டார் வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது அவர் மீது பேனர் ஒன்று விழுந்தது. இதில் தடுமாறிய அவர் கீழே விழுந்தார். கீழே விழுந்த சுபஸ்ரீ மீது பின்னால் வந்து கொண்டிருந்த லாரி ஏறியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து பல அரசியல் தலைவர்களும் நடிகர்களும் தங்களுக்கு பேனர் வைக்க கூடாது என தொண்டர்களிடமும் ரசிகர்களிடமும் கேட்டுக்கொண்டனர். இந்நிலையில் மதுரை மாவட்ட விஜய் ரசிகர் மன்ற தலைவர் தங்கபாண்டியனின் பிறந்த தினத்தை முன்னிட்டு, ரசிகர் மன்ற சார்பில் போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டர் உரிய அனுமதியின்றி ஒட்டப்பட்டுள்ளதாக குற்றசாட்டு எழுந்தது. இதனையடுத்து விஜய் ரசிகர் மன்ற பொருளாளர் சதீஷ்குமார் மற்றும் மேலும் இருவரின் மீதும் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த மூவரில் விஜய் ரசிகரான ஜெயகார்த்திக் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

முன்னதாக பிகில் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் தனது ரசிகர்கள் தனக்கு பேனர் வைக்க வேண்டாம் என்று நடிகர் விஜய் கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :