வேல்முருகன் மீது நடவடிக்கை எடுங்கள்: சபாநாயகருக்கு பரிந்துரை செய்த முதல்வர் ஸ்டாலின்..!
தமிழக வாழ்வுரிமை கழகத்தின் தலைவர் வேல்முருகன் இன்று சட்டமன்றத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர் அதிக பிரசிங்கித்தனமாக பேசுகிறார் என்றும், அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சபாநாயகருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பரிந்துரை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
சாதி வாரி கணக்கெடுப்பை தமிழக அரசு நடத்த வேண்டும் என்று வேல்முருகன் கோரிக்கை விடுத்ததோடு, அதை தொடர்பாக சில கருத்துகளையும் தெரிவித்தார். அவரது பேச்சு சர்ச்சைக்குரியதாக இருப்பதாக கருதப்பட்டதால், அவை குறிப்பிலிருந்து அவரது கருத்துக்கள் நீக்கப்படும் என்று சபாநாயகர் அறிவித்தார்.
இதனை அடுத்து, "எனக்கு பேசுவதற்கு அனுமதி தாருங்கள்" எனக் கூறிய அவர் நேரடியாக சபாநாயகர் அருகே சென்றார். மேலும், அமைச்சர்களை நோக்கியும் ஒருமையில் கையை நீட்டி பேசினார் என்பதும் தெரியவந்துள்ளது. இதனால், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் அவை மாண்பை மீறி நடந்து கொள்கிறார். அவர் மிகுந்த பிரசிங்கித்தனத்துடன் செயல்படுகிறார். எனவே, அவர்மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என பரிந்துரை செய்தார்.
இதனையடுத்து, சபாநாயகர் அப்பாவு, வேல்முருகனுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்து, இனிமேல் இவ்வாறு நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார். இந்த சம்பவம் சட்டமன்றத்தில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Mahendran