”ரஜினி சில நேரம் ”எங்களுக்கு” எதிராகவும் பேசுவார்”..
திருவள்ளுவரை போல் தனக்கும் காவி சாயம் பூசப்படுவதாக ரஜினிகாந்த் கூறியுள்ள நிலையில் இது குறித்து தமிழக பாஜக பொதுச் செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனத்தின் புதிய அலுவலகத்தில், இயக்குனர் கே.பாலச்சந்தரின் மார்பளவு சிலையை ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் திறந்துவைத்தனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரஜினிகாந்த், திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசியது போல், எனக்கும் காவி சாயம் பூசி வருகின்றனர், பாஜக தரப்பில் இருந்து யாரும் என்னை தொடர்புகொள்ளவில்லை என கூறினார்.
இந்நிலையில் ரஜினியின் இந்த பேட்டி குறித்து தமிழக பாஜக பொதுச் செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன் நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில், ”ரஜினிகாந்த் அவரது கருத்தை கூறியுள்ளார். ரஜினியின் கருத்துகள் சில நேரம் எங்களுக்கு ஆதரவாகவும் எதிராகவும் இருந்திருக்கிறது என கூறியுள்ளார்.
ரஜினி பாஜகவிற்கு ஆதரவு தெரிவிப்பதாக பல விமர்சனங்கள் எழுந்துவந்தன. மேலும் ரஜினியின் அரசியல் வருகையை பாஜகவினர் ஆதரித்தும் பேசி வந்தனர். இந்நிலையில் தற்போது ரஜினிகாந்த் பாஜகவிற்கும் எனக்கு எந்த தொடர்பும் இல்லை என்பது போல் கூறியுள்ளது பாஜகவினரை கொஞ்சம் அவநம்பிக்கையில் தள்ளியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.