பெண் நிர்வாகியை கட்சியில் இருந்து நீக்கிய டிடிவி தினகரன்.. சசிகலா காரணமா?
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், சசிகலாவை நேரில் சந்தித்த தனது கட்சி நிர்வாகியை அதிரடியாக நீக்கியுள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்பதில் சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகிய இருவரும் ஒரே நிலைப்பாட்டில் இருந்தாலும், கடந்த சில ஆண்டுகளாக அவர்களுக்குள் நிலவும் தனிப்பட்ட கருத்து வேறுபாடுகள் அவர்களை பிரித்தே வைத்துள்ளன.
சமீபத்தில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அமமுக இணைந்ததை சசிகலா தரப்பு விமர்சித்ததாக கூறப்பட்டது. இத்தகைய சூழலில், அமமுக நிர்வாகியான ஜீவிதா என்பவர் சசிகலாவை நேரில் சந்தித்து ஆசி பெற்ற புகைப்படம் இணையதளத்தில் வெளியானது.
இது கட்சி தலைமைக்குத் தெரிந்தே நடந்ததா என்ற கேள்வி எழுந்த நிலையில், அடுத்த சில மணிநேரங்களிலேயே ஜீவிதாவை கட்சியிலிருந்து நீக்கி டிடிவி தினகரன் உத்தரவிட்டார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம், சசிகலாவுக்கும் டிடிவி தினகரனுக்கும் இடையிலான விரிசல் இன்னும் ஆழமாக இருப்பதையே காட்டுகிறது. இது அமமுக தொண்டர்களிடையே குழப்பத்தையும், அரசியல் வட்டாரத்தில் விவாதத்தையும் கிளப்பியுள்ளது.
Edited by Siva