வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 20 செப்டம்பர் 2024 (09:16 IST)

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: பெயர் குழப்பம் குறித்து ஆட்சியர் விளக்கம்..!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்ட வருவாய்த் துறை அதிகாரிக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டதாக எழுந்த கண்டனங்கள் எழுந்த நிலையில் இது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.

2018-ஆம் ஆண்டில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அடக்க போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் 13 போராளிகள் உயிரிழந்தனர். அந்த துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட வருவாய்த்துறை அதிகாரி கண்ணன் உள்ளிட்ட பலர் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்ட கண்ணன் என்பவருக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்தன, இதனால் கண்டனங்கள் எழுந்த  நிலையில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் இதற்கு விளக்கம் அளித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

06.09.2024 அன்று, தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றும் 20 துணை வட்டாட்சியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதற்கிடையில், சில ஊடகங்களில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பான துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு உத்தரவிட்டதாக குற்றம்சாட்டப்பட்ட மு.கண்ணன் என்பவருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவல் முற்றிலும் தவறானது. துப்பாக்கிச் சூட்டில் குற்றம்சாட்டப்பட்ட மு.கண்ணன் என்பவருக்கு எந்தவித பதவி உயர்வும் வழங்கப்படவில்லை. பதவி உயர்வு வழங்கப்பட்டவர், திருச்செந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் துணை வட்டாட்சியராக பணியாற்றிய து.கண்ணன் ஆவார். அவருக்கும் 2018-ஆம் ஆண்டு சம்பவத்துக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. பெயர் குழப்பம் காரணமாக ஊடகங்களில் தவறான தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

Edited by Siva