செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: திங்கள், 25 செப்டம்பர் 2017 (10:27 IST)

எடப்பாடிக்கு தூது விட்ட 7 எம்.எல்.ஏக்கள் - காலியாகும் தினகரன் கூடாரம்

தினகரன் அணியில் உள்ள 7 எம்.எல்.ஏக்கள், முதல்வர் எடப்பாடி அணிக்கு தாவ சம்மதம் தெரிவித்து, அவருக்கு நெருக்கமானவர்கள் மூலம் தூது அனுப்பியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.


 

 
தினகரனுக்கு ஆதரவு தெரிவித்த 18 பேரை கர்நாடக மாநிலம் கூர்க் பகுதியில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் தினகரன் தங்க வைத்துள்ளார். அவர்கள் அனைவரையும் சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்தார். மேலும், அவர்களின் தொகுதிகளும் காலி என அரசு ஆணையில் அறிவிக்கப்பட்டது. 
 
அதன் பின் தினகரன் தரப்பு சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், தகுதி நீக்கத்திற்கு நீதிமன்றம் தடை விதிக்கவில்லை. ஆனால், 18 தொகுதிகளில் தேர்தலை அறிவிக்கக் கூடாது என்று மட்டும் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், அந்த வழக்கு வருகிற அக்டோபர் 4ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது. 
 
அந்நிலையில், முன்னாள் அமைச்சர் பழனியப்பன் மற்றும் செந்தில்பாலாஜியை கைது செய்யும் நடவடிக்கையில் தமிழக அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. அதன் எதிரொலியாகவே, கரூரில் உள்ள செந்தில் பாலாஜி உறவினர்கள், நண்பர்கள் என பலரின் வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த 4 நாட்களாக வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அதில், ரூ.100 கோடிக்கும் மேல் வருமான வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


 

 
எனவே, அவர்களை அடுத்து, தங்கள் மீதும் நடவடிக்கை பாயும் என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களில் பலர் கலக்கத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இதன் விளைவாக, தகுதி நீக்கம் தொடர்பாக தீர்ப்பு எப்படி வந்தாலும், நாங்கள் முதல்வர் பழனிச்சாமியையே ஆதரிக்கிறோம். எம்.எல்.ஏக்கள் பதவி கூட வேண்டாம். கட்சியில் அங்கீகாரம் கிடைத்தால் போதும். மேலும், முதல்வர் விரும்பினால், தினகரன் அணியில் இருந்த படி ஸ்லீப்பர் செல்லாக பணியாற்றவும் தயாராக இருக்கிறோம் என முதல்வர் பழனிச்சாமிக்கு 7 எம்.எல்.எக்கள் தூது அனுப்பியுள்ளனராம்.
 
ஆனால், தகுதி நீக்கம் குறித்து வேறு எந்த முடிவும் இனி எடுக்க முடியாது. கட்சியில் சேர்ப்பது குறித்து விவாதித்து முடிவு செய்யலாம் என முதல்வர் தரப்பில் பதிலளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 
 
எனவே, தினகரனின் கூடாரம் கொஞ்சம் கொஞ்சமாக காலியாகி விடும் என பலராலும் கூறப்பட்டு வருகிறது.