சசிகலா படத்தை தவிர்த்ததே தினகரன்தான் - போட்டு உடைத்த திண்டுக்கல் சீனிவாசன்
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலின் பிரச்சாரத்தின் போது சசிகலா படத்தை போட வேண்டும் எனக் கூறியதே தினகரன்தான் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.
மதுரையில் நடந்த அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:
“ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் தினகரன் போட்டியிட்ட போது, பிரச்சார விளம்பரங்களில் சசிகலா படத்தை போட வேண்டாம் என தினகரன் கூறினார். ஏன் வேண்டாம் என்கிறீர்கள் என நாங்கள் கேட்டபோது, அவரது படத்தைப் போட்டால் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் எனக் கூறினார். ஆனால், இப்போது எங்கள் மீது தேவையற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்.
சசிகலாவை தினகரனே ஏற்றுக்கொள்ளாத போது ஒன்றரை கோடி தொண்டர்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்?. சசிகலா சிறையில் இருந்த போது தன்னைத் தானே வேட்பாளராக தினகரன் அறிவித்துக் கொண்டார். கட்சிக்குள் குழப்பங்களை ஏற்படுத்தி வருகிறார். இரு அணிகளும் ஒன்று சேர வேண்டும் என்றார். நாங்கள் சேர்ந்து விட்டோம். ஆனால், இந்த ஆட்சியை அகற்ற வேண்டும் என்கிறார். அவரது எண்ணம் நிறைவேறாது” என அவர் பேசினார்.