இடைத்தேர்தல் நடந்தால்? –திமுக, அதிமுகவின் திட்டம்

Last Modified செவ்வாய், 30 அக்டோபர் 2018 (10:07 IST)
தமிழகத்தில் காலியாக இருக்கும் 20 தொகுதிகளுக்கும் கூடிய விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் சூழ்நிலையில் திமுக, அதிமுக மற்றும் அமமுக போன்ற கட்சிகள் தங்கள் அடுத்த திட்டங்களை வகுக்க ஆரம்பித்துள்ளனர்.

தேர்தல் ஆணையம் 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியையே இன்னும் அறிவிக்கவில்லை. ஆனால் அதிமுக தங்கள் கட்சியின் சார்பில் தேர்தல் பொறுப்பாளர்களை நேற்று அறிவித்துவிட்டது. பொறுப்பாளர்களிலும் அதிமுகவின் முக்கியப் புள்ளியாக இருக்கும் ஓ பன்னீர் செல்வம், மதுசூதனன், ஜெயக்குமார் மற்றும் தம்பிதுரை போன்றோரின் பெயர் இடம்பெற்றுள்ளது.

இந்த 20 தொகுதிகளில் நடக்க இருக்கும் இடைத்தேர்தலில் எப்படியாவது அதிகப்படியான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என அதிமுக தீவிரமாக செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் 20 தொகுதிகளில் நன்கு அறிமுகமான வேட்பாளர்களை தேர்வு செய்து நிறுத்துவது என முடிவு செய்துள்ளது. அதேப்போல தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களையும் தங்கள் பக்கம் இழுக்க முயற்சி செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

திமுகவும் தீர்ப்பு வந்ததில் இருந்து இடைத்தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்று தீவிரமாக ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகிறது. எப்படியும் தினகரன் சார்பில் அந்த 18 எம்.எல்.ஏக்கள் தான் வேட்பாளர்களாக இருப்பார்கள். கிட்டதட்ட அந்த தொகுதிகள் அனைத்தும் ஓராண்டுக்கு மேல் எம்.எல்.ஏ இன்றி எந்த திட்டங்களும் நிறைவேற்றாமல் செயலற்று இருக்கிறது. அதற்குக் காரணமாக உள்ள அதிமுக மற்றும் 18 எம்.எல்.ஏக்கள் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். அதனால அந்த அதிருப்தியை தங்களுக்கு சாதமாகப் பயன்படுத்திக் கொள்ள திமுக முயற்சி செய்யும் எனத் தெரிகிறது.

தினகரனைப் பொறுத்தவரை தேர்தல்களை சந்திப்பதில் மிகவும் திறமையானவர் என்ற பெயர் அவருக்குண்டு. ஆர் கே நகர் இடைத்தேர்தலில் கூட ஆளுங்கட்சியான அதிமுகவையும் எதிர்க்கட்சியான திமுகவையும் தோற்கடித்து சுயேட்சை வேட்பாளராக வெற்றி பெற்றுள்ளார். எனவே அவரையும் சாதாரணமாக எடை போட முடியாது. அதனால் அந்த 20 தொகுதிகளிலும் திமுக, அதிமுக மற்றும் அமமுக என்ற மூன்று கட்சிகளுக்கு இடையிலான மும்முனைப் போட்டியாக இருக்கும் என அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :