ஐ.பி.எல் போட்டியை புறக்கணியுங்கள் - தினகரன் வேண்டுகோள்
சென்னையில் நடைபெறவுள்ள ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை புறக்கணிக்குமாறு தமிழ் கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின்பும் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை. இது தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுக உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் தீவிரமாக போராட்டங்களை முன்னெடுத்துள்ளன.
இந்நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் வருகிற 10ம் தேதி ஐ.பி.எல் போட்டி நடைபெறவுள்ளது. காவிரி விவகாரம் பூதாகரமாகியுள்ள இந்த சூழ்நிலையில், இந்த போட்டியை தமிழ் கிரிக்கெட் ரசிகர்கள் புறக்கணிக்க வேண்டும் என பலரும் கூறி வருகின்றனர். தற்போது அதே கருத்தை தினகரனும் தெரிவித்துள்ளார்.
தனது டிவிட்டர் பக்கத்தில் “காவிரி உரிமை மீட்பு போராட்டத்தில் விவசாயிகளின் குரலுக்கு வலு சேர்க்கும் விதமாக இந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை புறக்கணிக்குமாறு தமிழக கிரிக்கெட் ரசிகர்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.