1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 12 பிப்ரவரி 2024 (17:57 IST)

10 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை..! சிபிசிஐடி மனு தள்ளுபடி..!!

vengaivayal issue
வேங்கைவயல் விவகாரத்தில் 10 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்தக் கோரிய சி.பி.சி.ஐ.டி.யின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
 
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக்கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக்கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் கோரிக்கை வைத்தன.
 
இதுகுறித்து புதுக்கோட்டை போலீசார் விசாரணை தொடங்கினர். பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதை தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடந்து வருகிறது
 
சி.பி.சி.ஐ.டி. போலீசார் 221 பேரிடம் நேரில் விசாரணை மேற்கொண்டனர். அதனை தொடர்ந்து சந்தேகத்திற்கு இடமானவர்களாக கருதப்பட்ட 31 பேரிடம் மட்டும் டி.என்.ஏ. பரிசோதனை மாதிரிகள், மனிதக்கழிவு கலக்கப்பட்ட குடிநீர் மாதிரிகளுடன் ஒத்துப்போகவில்லை என தெரியவந்தது.
 
இதனைத் தொடர்ந்து சிபிசிஐடி போலீசார், அடுத்த கட்டமாக குற்றவாளிகளை கண்டறிய சந்தேகத்திற்கிடமான குறிப்பிட்ட 10 பேரை தேர்ந்தெடுத்து அவர்களை உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த திட்டமிட்டனர். இதற்காக நீதிமன்ற அனுமதியை கோரி மனு தாக்கல் செய்தனர். 


இந்நிலையில் வேங்கைவயல் விவகாரத்தில் 10 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி கோரிய சிபிசிஐடி போலீசாரின்  மனுவை தள்ளுபடி செய்து புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.